நாட்டில் ஒற்றுமை இல்லாவிட்டால் முன்னேற்றம் இல்லை என்று பிரதமர் மோடி கூறினார்.
தேசிய ஒற்றுமை தினம்
இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் 140–வது ஆண்டு பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி
டெல்லியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராஜபாதையில்
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஒற்றுமை ஓட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக
அவர், பாராளுமன்ற சாலையில் உள்ள வல்லபாய் பட்டேல் சிலைக்கு மலர் அஞ்சலியும்
செலுத்தினார்.
விழாவில் அண்மைக்காலமாக நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்து வருவதை சுட்டிக்காட்டும் விதமாக மோடி பேசினார்.
அவர் கூறியதாவது:–
சிறந்த இந்தியா
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, சிதறிக் கிடந்த சமஸ்தானங்களை
ஒருங்கிணைத்து ஒரே இந்தியாவாக உருவாக்கியதில் சர்தார் வல்லபாய் பட்டேலின்
பங்கு மிகப்பெரியது. எனினும், தனது குடும்பத்தை ஒரு போதும் அவர்
முன்னிறுத்தியது கிடையாது. தனக்கிருந்த செல்வாக்கை தனது குடும்பத்தினர்
யாரும் பயன்படுத்திக் கொள்ள அவர் அனுமதித்தும் இல்லை.
பட்டேல் நமக்கு
ஒன்றுபட்ட இந்தியாவை கொடுத்தார். இப்போது நமக்குள்ள கடமை என்னவென்றால் 125
கோடி மக்கள் தொகை கொண்ட நமது நாட்டை சிறந்த இந்தியாவாக உருவாக்கவேண்டும்
என்பதுதான்.
இதற்காக மாநிலங்களுக்கு இடையே ஒருவர் மீதான இன்னொருவரின்
கலாசாரத்தை புரிந்து கொள்ள ‘ஒரே இந்தியா, சிறந்த இந்தியா’ திட்டம்
தொடங்கப்படும். இந்த திட்டத்திற்கு ஒரு குழு அமைக்கப்பட்டு தேவையான பணிகள்
விரைவில் மேற்கொள்ளப்படும்.
ஒற்றுமை இல்லாவிட்டால்...
மக்கள் அனைவரும் ஒன்றாக இல்லாவிட்டால், நாட்டில் வளர்ச்சி என்பதற்கே வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.
மறைந்த
தலைவர்களின் சித்தாந்தங்களை நாம் ஆய்வு செய்வதுடன் மட்டும் நின்று
விடக்கூடாது. அவர்களின் தொண்டுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக்
கொள்ளவேண்டும். நாட்டுக்காக அவர்கள் செய்த தியாகங்களின் மூலம் ஊக்கத்தை
பெறவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், சுட்டுக்
கொல்லப்பட்ட பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளை நினைவூட்டும் விதமாக
அவருடைய தியாகங்கள் குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.
ஒரே இந்தியா, சிறந்த இந்தியா
மாநிலங்களுக்கு இடையே கலாசார பகிர்வு திட்டம்
பிரதமர் விரிவான விளக்கம்
வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் விழாவில் பேசிய பிரதமர் மோடி மாநிலங்களுக்கு
இடையே கலாசாரங்களை பகிர்ந்து கொள்ளும் திட்டமான ‘ஒரே இந்தியா, சிறந்த
இந்தியா’ குறித்து விளக்கமாக பேசினார்.
அவர் கூறியதாவது:-
இத்திட்டம் மாநிலங்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும். அதாவது,
2016-ம் ஆண்டு அரியானா மாநிலம், தமிழ்நாட்டின் கலாசாரத்தை பகிர்ந்து
கொள்ளும் என வைத்துக் கொண்டால், அந்த ஆண்டில் அரியானா மாநில பள்ளிகளில் 100
தமிழ் சொற்தொடர்கள் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும். அவர்கள் ஒரு தமிழ்
பாடலையும் மாணவர்களுக்கு சொல்லித் தருவார் கள். அரியானா மாநிலத்தவர் கள்
தமிழ்நாட்டுக்கு சுற்றுலாவும் செல்வார்கள். அப்போது அரியானா சார்பில்
உணவுத் திருவிழாவும் நடக்கும்.
இதேபோல் தமிழ்நாடும் அரியானாவிடம் இருந்து கலாசாரங்களை பெறும். இப்படி
ஒவ்வொரு மாநிலமும், தங்களுடைய கலாசாரங்களை மற்ற மாநிலங்களுடன் பகிர்ந்து
கொள்வதன் மூலம் இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற மாண்பை நன்கு
புரிந்து கொள்ளச் செய்ய இயலும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், முதல் முறையாக
ராமேசுவரத்தில் இருந்து டெல்லிக்குபயணம் மேற்கொண்டபோது, இந்தியாவின்
வேற்றுமையில் ஒற்றுமை என்னும் மாண்பை தான் நன்கு அறிந்து கொண்டதாக ஒரு முறை
கூறி இருந்ததையும் அப்போது, மோடி சுட்டிக் காட்டினார்.