வங்கக்கடலில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால்,
இன்று முதல், ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு
மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை
தீவிரமடைந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழை,
கடந்த சில நாட்களாக சற்று குறைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக
மழை பெய்துள்ளது. இந்நிலையில், 'தமிழகம், புதுச்சேரியில், இன்று முதல்,
ஐந்து நாட்களுக்கு, கனமழை நீடிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம்
அறிவித்துள்ளது.
இதுகுறித்து மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:தென்
மேற்கு வங்கக்கடலில், இலங்கை அருகே நிலை கொண்டிருந்த காற்றுஅழுத்தத்
தாழ்வு நிலை, அதே இடத்தில் நீடிக்கிறது.அதே நேரத்தில், தென் கிழக்கு
வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமானில், புதிய காற்றழுத்த
தாழ்வு நிலை உருவாகி உள்ளது.இது, தமிழக கடல் பகுதிக்கு நகர்ந்து வருவதால்,
அடுத்த, 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில், ஒரு சில இடங்களில் கன
மழை பெய்யும். வட கடலோர மாவட்டங்களில், பல இடங்களில் கனமழைக்கு
வாய்ப்புள்ளது. சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில
இடங்களில் மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில்,
'தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில், இன்று, புதிதாக ஒரு, காற்றழுத்த
தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது; இதனால், டிசம்பர், 5ம் தேதி வரை, கனமழை
தொடரும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.நேற்று காலை,
8:30 மணி நிலவரப்படி, கன்னியாகுமரி - 4, பாபநாசம் - 3, காட்டுக்குப்பம்,
மாமல்லபுரம், செங்கோட்டை - 2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.