பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்
உளவியல் ரீதியாக தயாராக வேண்டும் என அனைத்து பள்ளிகளையும், தேர்வுத்துறை
இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், 10ம்
வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும், அரசு, மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ
இந்தியன் பள்ளி மாணவர்களுக்கு, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வு
நடைபெற உள்ளது.
இதற்கான தயாரிப்பு பணிகளில், அரசுத் தேர்வுத்துறை
இயக்குனரகம் ஈடுபட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த,
தற்போதே தீவிர பயிற்சி வழங்கவும், சந்தேகங்களை தீர்க்கவும், அனைத்து பள்ளி
தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம்
சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையின் விவரம்:
புத்தகத்தில் உள்ள கருத்துக்களை முழுமையாக படித்து,
புரிந்து தேர்வுக்கு தயாராவதற்கு பதில், கடந்த பருவங்களில் வெளியான
வினாக்களின் தொகுப்பை மட்டும் படித்தால், முழு மதிப்பெண் பெறலாம் என்ற
தவறான எண்ணம் மாணவர்களிடம் தென்படுகிறது. அதனால், வினா கட்டமைப்புக்கு
உட்பட்டு, புத்தகத்தில் உள்ள கருத்துக்களை உள்ளடக்கி, வினாக்கள்
கேட்கப்படும் போது, மாணவர்களிடம் அச்சம் ஏற்படுகிறது.
மாணவர்கள் இந்த அச்சத்தை போக்க, அனைத்து வினாக்களையும்,
தன்னம்பிக்கையுடனும், முழு புரிதலுடனும் பதிலளிக்க ஏதுவாக, புத்தகத்தில்
உள்ள கருத்துக்களை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என
சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.








