இந்திய மருத்துவ வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தும் புதிய திட்டத்தை மத்திய
சுகாதார, குடும்ப நலத்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.இத்திட்டத்தின்படி
ஒவ்வொரு தனிநபரின் உடல்நிலை குறித்த முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டு,
அதன் அடிப்படையில் ஒரு மருத்துவ அடையாள எண் வழங்கப்படும்.நாம்
மருத்துவரிடம் செல்லும்போது இந்த எண்ணைக் கூறினால் அவர் நமது உடல் நிலையின்
பின்னணி, இதற்கு முன்பு எந்த நோய்க்கெல்லாம் சிகிச்சை பெற்றுள்ளோம்,
கடைசியாக எப்போது மருத்துவமனைக்குச் சென்றோம் என்பது உள்ளிட்ட அனைத்து
விவரங்களையும் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்க முடியும்.
இத்திட்டம்
இணையம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. எனவே, இந்தியாவில் மட்டுமின்றி
உலகின் வேறு நாடுகளில் உள்ள மருத்துவரிடம் சென்றாலும், அவர் நமது உடல் நிலை
தொடர்பான விவரங்களை மருத்துவ அடையாள எண் மூலம் உடனடியாகத் தெரிந்து கொண்டு
எளிதாக சிகிச்சை அளிக்க முடியும்."ஸ்னோமெட் சி.டி.' என்று
அழைக்கப்படும் இந்தத் திட்டம் சர்வதேச மருத்துவ உலகத்தில் மிகவும்
பிரபலமானது. ஒவ்வொரு தனிநபரின் உடல் நிலை குறித்த விவரங்களையும் மின்னணு
முறையில் சேகரித்து வைத்து, அதனை அவர்களுக்கு தேவைப்படும்போது
பயன்படுத்திக் கொள்வதுதான் இத்திட்டத்தின் முக்கிய அம்சம். இப்போது 28
நாடுகள் இத்திட்டத்தில் உறுப்பினராக உள்ளன.
"ஸ்னோமெட் சி.டி.'
திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை
அமைச்சகம் சமீபத்தில் ஒரு கருத்தரங்கை நடத்தியது. இத்திட்டம் தொடர்பாக
அப்பல்லோ மருத்துவமனையின் தலைமைத் தகவல் அதிகாரி சிவராமகிருஷ்ணன்
கூறியதாவது:
சுகாதாரத் துறையை நவீனமயமாக்குவதில் இந்தியா இப்போது
வேகமாக முன்னேறி வருகிறது. ஒருவரது உடல்நிலை மற்றும் அவருக்கு உள்ள நோய்கள்
குறித்த விவரங்களை மின்னணு முறையில் சேகரித்து வைத்து அவற்றைத் தேவைக்கு
ஏற்ப பயன்படுத்தும் திட்டத்தில் இப்போது அடியெடுத்து வைக்க இருக்கிறோம்.
இதன்படி ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு மருத்துவ அடையாள எண் வழங்கப்படும்
என்றார் அவர்.