கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், தங்கள் குழந்தைகளுக்கு இலவச இடம் பெற,
போலி ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகளை பெற்றோர் கொடுத்து, 'சீட்'களை பெற
முயற்சித்தது அம்பலமாகி உள்ளது.கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், தங்கள்
பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இலவச சீட் பெற, பெற்றோர், ஆதார் அட்டை அல்லது
வாக்காளர் அடையாள அட்டையை தாக்கல் செய்தால் போதும்.இதையடுத்து, வரும்
கல்வியாண்டு, 2016 - -17ல், கல்வி உரிமை சட்டத்தில், பிற வார்டுகளில் உள்ள
பள்ளிகளில் தங்கள் குழந்தைகளுக்கு சீட் பெறுவதற்காக, அந்த வார்டுகளில்
குடியிருப்பது போல், போலி ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகளை தயாரித்து
விண்ணப்பிப்பது தெரிய வந்துள்ளது.கடந்த ஆண்டு, 27 ஆயிரத்து, 994 ஆர்.டி.இ.,
சீட்டுகளுக்கு, 1.14 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 10
ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் போலி அட்டைகள் இணைத்திருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரம்ப மற்றும் நடுத்தர கல்வி முதன்மை செயலர் அஜய்
சேத் கூறுகையில், ''பெற்றோர், அவரவர் வார்டுகளில் உள்ள பள்ளிகளில்
ஒதுக்கப்பட்டுள்ள, ஆர்.டி.இ., சீட்களுக்கு தான் விண்ணப்பிக்க வேண்டும்.
''அதற்கான
ஆதாரங்களுக்காகவே ஆதார், வாக்காளர் அடையாள அட்டை கேட்கப்படுகிறது. மற்ற
வார்டுகளில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பதற்காக போலி அடையாள அட்டைகளை தயாரித்து
இணைப்பது குற்றம். இதனால், அந்தந்த வார்டுகளில் உள்ள பயனாளிகளுக்கு
கிடைக்க வேண்டிய சீட்டுகளை அவர்கள் இழக்க நேரிடலாம்,'' என்றார்.