மதுரை காமராஜ் பல்கலை நேரடி சேர்க்கை (லேட்ரல் என்ட்ரி) மாணவர்களின் தேர்வு
முடிவுகள் பல மாதங்களாக கிடப்பில் உள்ள நிலையில், 2016 ம் ஆண்டிலாவது
முடிவு அறிவிக்கும் நடவடிக்கையை பல்கலை துரிதப்படுத்த வேண்டும் என
தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.இப்பல்கலை தொலைநிலை கல்வியில் நேரடி
இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு சேர்க்கையான மாணவர்களுக்கு மே மாதம்
தேர்வு நடந்தது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். 2014 மற்றும்
2015ல் நேரடி மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது
குறித்து உயர்கல்வி செயலர் அபூர்வாவிற்கு சிலர் புகார் அனுப்பினர்.
இந்நிலையில் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க பல்கலை
உத்தரவிட்டது.தேர்வர்கள் கூறியதாவது: முடிவு வெளியிடுவதில் தாமதத்தால்
முதுகலை படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியவில்லை. சிலர் பதவி உயர்வுக்காக
காத்திருக்கின்றனர். 'டிகிரி' முடித்தால் பல போட்டி தேர்வுகளை எழுதலாம்.
உரிய
கட்டணம் செலுத்தி தான் எழுதியுள்ளோம். சிலர் செய்த தவறால் தேர்வு எழுதிய
அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியவில்லை. கன்வீனர் கமிட்டி
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பல மாதங்களாக கிடப்பில் உள்ள
இப்பிரச்னை குறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.பேராசிரியர்கள் கூறுகையில், "இதற்கு முன் இருந்த பதிவாளர் 'லேட்ரல் என்ட்ரி' தேர்வுகளின் முடிவு வெளியிட தடை விதித்து சுற்றறிக்கை வெளியிட்டார். அத்தடையை விலக்கி தற்போதைய பதிவாளர் முத்துமாணிக்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றனர்.