காஸ் சிலிண்டர்களுக்கு, அரசு அளிக்கும் மானியத்தைப் பெற, ஆதார் எண் மற்றும்
வங்கிக் கணக்கு எண்ணை அளிக்க வேண்டும்' என, எண்ணெய் நிறுவனங்கள்
அறிவுறுத்தின. ஆதார் எண் இல்லாதவர்கள், வங்கிக் கணக்கு எண்ணை அளித்தால்
போதும் என, பின் தெரிவிக்கப்பட்டது. 'அரசு திட்டங்களுக்கு, ஆதார் எண்ணை
கட்டாயமாக்கக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இந்த
விதி தளர்வு அளிக்கப்பட்டது.
ஆனால் தற்போது, 'வாடிக்கையாளர்களிடம்
ஆதார் எண்ணைப் பெற்று, இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, காஸ்
ஏஜன்சிகளுக்கு, எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன.இது குறித்து, காஸ்
முகமை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், 'வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண்
பெற்று, பிப்., 15க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, எண்ணெய்
நிறுவனங்களிடம் இருந்து, 'இ - மெயில்' வந்துள்ளது' என்றார்.
இது
குறித்து, முற்போக்கு நுகர்வோர் சங்கத் தலைவர் சடகோபன் கூறுகையில்,
''மானியம் பெற, வங்கிக் கணக்கு போதும் என, அறிவித்த பின், திடீரென்று ஆதார்
எண் வேண்டும் என, நெருக்கடி ஏற்படுத்துவது முறையற்றது,'' என்றார். - நமது
சிறப்பு நிருபர் -