பார்வையற்ற பட்டதாரி
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24 வகையான உயர் பதவிகளுக்கு, மத்திய அரசின் தேர்வாணையம் வருடந்தோறும் தேர்வை நடத்தி வருகிறது. சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
இதில், சென்னை மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த பார்வையற்ற பட்டதாரி பாலநாகேந்திரன் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்த தேர்ச்சி குறித்து பாலநாகேந்திரன் கூறியதாவது:-
சென்னையில் பிறந்த நான் பிறவியிலேயே பார்க்கும் திறனை இழந்தேன். நான் கல்வி கற்க சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்தேன். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆகவேண்டும் என்று 6 வயதிலேயே எனக்கு ஆசிரியர்கள் வேட்கையை உண்டாக்கினார்கள். அதன் விளைவே, 20 ஆண்டுகள் கழித்து நேர்முகத்தேர்வு வரை பயணிக்க உதவியது.
இந்த பயணத்தில் மனிதநேய இலவச பயிற்சி மையம் எனக்கு எல்லா தருணத்திலும் உறுதுணையாக இருந்தது. இது எனக்கு 5-வது முயற்சி. இப்போது நேர்முகத்தேர்வுக்கு செல்ல தேர்ச்சிபெற்றுள்ளேன்.
கனவு நனவாகும்
2010-ம் ஆண்டு முதல் மனிதநேய பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வருகிறேன். நான் தான் எனது குடும்பத்தில் முதல் பட்டதாரி. எல்லோரும் சமமாக வாழவேண்டும் என்ற வாழ்க்கை தர முயற்சியிலும், குழந்தைகள் மற்றும் பெண் கல்வி வளர்ச்சியிலும், மனித மேம்பாட்டு முயற்சியிலும் என்னை ஈடுபடுத்திக்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற பணியின் மூலம் நிறைவேற்றப்படவேண்டும் என்பதே எனது லட்சியம். அதற்குத்தான் இந்த பயிற்சி மையம் பாலமாக அமைந்தது.
நேர்முகத்தேர்வுக்கு மனிதநேய பயிற்சி மையம் அனைத்து வசதிகளையும் இலவசமாக பயிற்சி அளித்து என்னுடைய லட்சியத்தை நினைவாக்குவதற்கு உறுதுணையாக இருக்கும் என்பது அய்யமில்லை. என் லட்சியத்திற்கு ஊக்குவித்த சைதை துரைசாமிக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு பாலநாகேந்திரன் தெரிவித்தார்.








