ஆனால், இந்த ஆண்டு பொருள்காட்சியை குறிப்பிட்ட நாளில் தொடங்கவில்லை. தாமதமாகவே தொடங்கியது. இதுபோன்ற காரணத்தால் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் வியாபாரம் மந்தமாகவே இருக்கிறது. அதனால், பார்வையாளர்களின் வருகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் கூறிதாவது:
எப்போதுமே ஜனவரி முதல் வாரத்தில் பொருள்காட்சி தொடங்கும். இந்த ஆண்டில் மழை போன்ற காரணங்களால் பொருள்காட்சி தாமதமாகவே தொடங்கப்பட்டது. இதனால், அரங்குகள், கடைகள் அமைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. எப்போதுமே தொடங்கிய 15 நாள்களில் பொதுமக்கள் அதிகம் வருவதால் வசூலும் அதிகமாக இருக்கும். விடுமுறை நாள்களில் பார்வையாளர்கள் அதிகமாக வருவர். இந்தப் பொருள்காட்சி தொடங்கிய 32 நாள்களில் இதுவரை 5.85 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இதன்மூலம், ரூ.1.18 கோடி வருவாயும் கிடைத்துள்ளது. கடந்தாண்டு இதே நாள்களில் 6.25 லட்சம் பேர் பார்வையிட்டனர்.
வரும் நாள்களில் பொருள்காட்சிக்கு பார்வையாளர்களை அதிகளவில் ஈர்ப்பதற்காக, பெண்களுக்கான சமையல், கோலப் போட்டிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல, நாள்தோறும் பார்வையாளர்களுக்கு குலுக்கல் முறையில் வழங்கும் பரிசுகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.








