ரெயில்வே பட்ஜெட்டில் பயணிகள், சரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை.
இந்தியாவிலேயே முதன் முதலாக சென்னையில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர
வாகன ஏற்றுமதி மையம் தொடங்கப் படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாராளுமன்றத்தின்
பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 23–ந்தேதி தொடங்கியது. அன்று இரு சபைகளின்
கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார்.
ரெயில்வே பட்ஜெட் தாக்கல்
2016–2017–ம் நிதி ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ரெயில்வே
இலாகா பொறுப்பை வகிக்கும் மந்திரி சுரேஷ் பிரபு இந்த பட்ஜெட்டை தாக்கல்
செய்தார். அப்போது பல்வேறு புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பை அவர்
வெளியிட்டார். ரெயில்வேயை சீரமைத்து மேம்படுத்த மேற்கொள்ளப்பட இருக்கும்
நடவடிக்கைகள் பற்றியும் அப்போது அவர் அறிவித்தார்.
சுரேஷ் பிரபு தொடர்ந்து 2–வது ஆண்டாக ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளார்.
ரெயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:–
கட்டணம் உயர்வு இல்லை
* ரெயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதேபோல் சரக்கு கட்டணத்திலும் மாற்றம் செய்யப்படவில்லை.
*
2016–2017–ம் நிதி ஆண்டில் 2,800 கிலோ மீட்டர் நீளத்துக்கு அகல ரெயில்
பாதை அமைக்கப்படும். ஒரு நாளைக்கு 7 கி.மீ. நீள அகல ரெயில் பாதை
அமைக்கப்படும்.
* புதிய ரெயில் பாதை அமைப்பது, இரட்டை ரெயில் பாதை
அமைப்பது, மீட்டர் கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றுவது உள்ளிட்ட 90 புதிய
ரெயில்வே திட்டங்கள் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 172 கோடி செலவில்
நிறைவேற்றப்படும்.
* 2 ஆயிரம் கி.மீ. தூர ரெயில் பாதை மின்சாரமயமாக்கப்படும்.
* ஆமதாபாத்–மும்பை இடையே அதிவேக ரெயில் பாதை அமைக்கப்படும்.
*
டெல்லி–சென்னை நகரங்களுக்கு இடையே அதிவேக சரக்கு ரெயில் பாதை
அமைக்கப்படும். இதேபோல் கராக்பூர்–மும்பை, கராக்பூர்–விஜயவாடா இடையேயும்
அதிவேக சரக்கு ரெயில் பாதைகள் அமைக்கப்படும்.
பெண்களுக்கு சலுகை
* முன்பதிவு ஒதுக்கீட்டில் பெண் பயணிகளுக்கு 33 சதவீத இருக்கைகள் ஒதுக்கப்படும். அவர்களுக்கான கீழ் படுக்கை வசதி அதிகரிக்கப்படும்.
*
மூத்த குடிமக்களுக்கு கீழ் படுக்கை வசதி 50 சதவீதமாக அதிகரிக்கப்படும்.
இதன்மூலம் ஒவ்வொரு ரெயிலிலும் அவர்களுக்கு 120 கீழ் படுக்கைகள் கிடைக்கும்.
* மூத்த குடிமக்களின் வசதிக்காக ரெயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள், லிப்ட் வசதிகள் அதிகரிக்கப்படும்.
* ரெயில்களில் குழந்தைகளுக்கு சிறப்பு உணவுகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
* ரெயில் நிலையங்களில் குழந்தைகள் உணவு, சூடான பால், வென்னீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
* ரெயில்களில் உணவுப் பொருட்கள் சப்ளை செய்ய சுயஉதவி குழுக்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள்
* ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
* ரெயில் பெட்டிகள் அசுத்தமாக இருப்பது பற்றி செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
* ரெயில் என்ஜின்களில் கழிவறை வசதி ஏற்படுத்தப்படும்.
*
மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு உதவும் வகையில் ரெயில் நிலையங்களில்
பேட்டரி கார்கள், சக்கர நாற்காலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
* ஏ–1 பிரிவின் கீழ் வரும் ரெயில் நிலையங்களில் ஒவ்வொரு பிளாட்பாரத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை அமைக்கப்படும்.
பயணிகள் காப்பீடு
பயணிகள் டிக்கெட் வாங்கும் போது, விரும்பினால் அவர்கள் தங்கள் பயணத்துக்காக காப்பீடு செய்து கொள்ளலாம்.
* 139 என்ற உதவி எண் மூலம் ரெயில் டிக்கெட்டுகளை ரத்து செய்ய ஒரேயொரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) வழங்கப்படும்.
* பரீட்சார்த்த அடிப்படையில் ரெயில் டிக்கெட்டுகளில் பார்கோடு வசதி ஏற்படுத்தப்படும்.
* தட்கல் டிக்கெட் கவுண்ட்டர்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.
* தற்போது உள்ள இணையதள கேட்டரிங் சேவை ஏ–1 மற்றும் ஏ பிரிவின் கீழ் வரும் 408 ரெயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
வேளாங்கண்ணி
* பக்தர்கள் அதிகம் வரும் வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருப்பதி,
வாரணாசி, அமிர்தசரஸ் போன்ற ஆன்மிக தலங்களில் உள்ள ரெயில் நிலைகளில்
பயணிகளுக்காக கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படுவதோடு, அந்த ரெயில் நிலையங்கள்
அழகுபடுத்தப்படும்.
* பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள
வழித்தடங்களில் ஏழை–எளியவர்களின் வசதிக்காக முன்பதிவு இல்லாத தொலைதூர
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
* இதேபோல் போக்குவரத்து அதிகம் உள்ள வழித்தடங்களில் மாடி ரெயில்கள் (உதய் ரெயில்) இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
* மணிக்கு 130 கி.மீ. வேகத்துக்கும் மேலாக இயங்கும் தேஜாஸ் ரெயில்கள் இயக்கப்படும்.
* முற்றிலும் குளுகுளு வசதி கொண்ட 3–ம் வகுப்பு ஹம்சபார் ரெயில் அறிமுகப்படுத்தப்படும்.
*
சில தொலைதூர ரெயில்களில் முன்பதிவு இல்லாத 2 முதல் 4 பெட்டிகள் கூடுதலாக
இணைக்கப்படும். அந்த ரெயில்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும். மேலும்
செல்போன்களை சார்ஜ் செய்வதற்கான வசதியும் ஏற்படுத்தப்படும்.
சென்னையில் வாகன ஏற்றுமதி மையம்
* கையடக்க கருவியின் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படும்.
* எந்திரங்கள் மூலம் பிளாட்பாரம் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
*
கணினிவழி பயணச்சீட்டு வழங்கும் திறன் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம்
ஒரு நிமிடத்துக்கு 2 ஆயிரம் டிக்கெட்டுகளுக்கு பதிலாக 7,200 டிக்கெட்டுகள்
வழங்க முடியும். மேலும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பயன்பாட்டாளர்கள் ஒரே
சமயத்தில் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
* 2020–ம் ஆண்டுக்குள் அனைத்து ஆளில்லா ‘ரெயில்வே கேட்’களும் ஒழிக்கப்படும்.
*
வெளிநாடுவாழ் இந்தியர்கள், சுற்றுலா பயணிகள் வெளிநாட்டு டெபிட், கிரெடிட்
கார்டுகள் மூலம் இ–டிக்கெட் பெறுவதற்கான வசதி ஏற்படுத்தப்படும்.
*
தமிழக அரசின் பங்களிப்புடன் சென்னையில் புறநகர் ரெயில் சேவை
மேம்படுத்தப்படும். இதேபோல் பெங்களூரு, ஐதராபாத், ஆமதாபாத், திருவனந்தபுரம்
ஆகிய நகரங்களிலும் அந்தந்த மாநில அரசுகளின் பங்களிப்புடன் புறநகர் ரெயில்
சேவை மேம்படுத்தப்படும்.
* இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் வாகனங்கள் ஏற்றுமதி மையம் மையம் (‘ஆட்டோ ஹப்’) தொடங்கி வைக்கப்படும்.
ரூ.1½ லட்சம் கோடி முதலீடு
* அடுத்த 2 ஆண்டுகளில் 400 ரெயில் நிலையங்களில் வை–பை வசதி
ஏற்படுத்தப்படும். இந்த ஆண்டில் 100 ரெயில் நிலையங்களில் இந்த வசதி
உருவாக்கப்படும்.
* நேரடி டீசல் கொள்முதல் மூலம் 2016–2017–ம் நிதி ஆண்டில் ரூ.1,500 கோடி சேமிக்கப்படும்.
* 2 இடங்களில் ரெயில் என்ஜின் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.
* பத்திரிகையாளர்கள் கட்டண சேவையை பயன்படுத்தி இணையதளம் மூலமும் முன்பதிவு செய்யலாம்.
* ரெயில்வேயில் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்.ஐ.சி.) 5 ஆண்டுகளில் ரூ.1½ லட்சம் கோடி முதலீடு செய்யும்.
* ரெயில்வே வாரியம் மாற்றி அமைக்கப்படும்.
* ரெயில்வே பட்ஜெட்டின் திட்ட மதிப்பீடு ஒரு லட்சத்து 21 ஆயிரம் கோடியாக இருக்கும்.
*
ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில் பாதைகளின் அருகே உள்ள ரெயில்வேக்கு
சொந்தமான நிலங்கள் தோட்டகலை பயிர்கள் செய்யவும், மரங்கள் நட்டு வளர்க்கவும்
குத்தகைக்கு விடப்படும். அந்த நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படாமல்
இருக்கவும், வேலைவாய்ப்பை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை உதவும். மேலும்
இப்படி காலியாக உள்ள நிலங்களில் சூரிய ஒளி மின்சக்தி நிலையங்கள்
அமைப்பதற்கான வாய்ப்புகள் பற்றியும் ஆராயப்படும்.
மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ரெயில்வே பட்ஜெட்டில் இடம்பெற்று உள்ளன.