பிளஸ்–2 தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை
தேர்வு நடைபெறும் மைய பள்ளிக்கூடங்களில் தடை இல்லா மின்சாரம் வழங்க
அந்தந்தப் பகுதி என்ஜினீயர்களுக்கு மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
பிளஸ்–2 தேர்வு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 4–ந்தேதி
தொடங்கி ஏப்ரல் 1–ந்தேதி முடிவடைய உள்ளது. பிளஸ்–2 தேர்வு சிறப்பாக நடைபெற
அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தரா தேவி
தலைமையில் இணை இயக்குனர் உமா, இணை இயக்குனர் அமுதவல்லி ஆகியோர் செய்து
வருகிறார்கள்.
தற்போது மாணவ–மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு
வழங்கப்படும் விடைத்தாள்களின் முகப்பு தாளில் ரகசிய கோடு இருக்கும். தேர்வு
எழுதிய பின்னர் அந்தந்த முகப்பு தாள் நீக்கப்பட்டு விடைத்தாள்,
மதிப்பீட்டுக்கு செல்லும். தற்போது விடைத்தாளின் (விடை எழுதாத தாள்)
முகப்பு தாள் தேர்வு மையம் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களால் தைக்கப்பட்டு
விட்டது.
மேலும் பிளஸ்–2 வினாத்தாள் அனைத்து மாவட்டத்திற்கும்
அனுப்பப்பட்டு உள்ளன. வினாத்தாள் மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணிநேரமும் பணியில் மாற்றி மாற்றி
ஈடுபடுகிறார்கள்.
தேர்வு மையங்களுக்கு தடை இல்லா மின்சாரம்
மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுத அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அரசு தேர்வுகள் துறை
அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி மின்சார துறை அதிகாரிகள், அரசு
தேர்வுத்துறை இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் கலந்துகொண்ட கூட்டம்
நடைபெற்றது.
கூட்டத்தில் மார்ச் 4–ந்தேதி முதல் ஏப்ரல் 1–ந்தேதி வரை
தமிழ்நாடு முழுவதும் அனைத்து தேர்வு மையங்களுக்கும் காலை 7 மணி முதல் மாலை 4
மணிவரை தடை இல்லா மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவு குறித்து அனைத்து என்ஜினீயர்களுக்கும் மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.