பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூடுகிறது; இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்:
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டு அதில் எம்.எல்.ஏ.க்கள் பலர் விவாதித்தனர்.
எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு ஜனவரி 23-ந் தேதி அன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து பேசினார். அந்த நிகழ்ச்சியோடு கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.
இன்று இடைக்கால பட்ஜெட்
அ.தி.மு.க. தலைமையிலான இந்த ஆட்சி, வரும் மே மாதத்தோடு நிறைவடைகிறது. எனவே தமிழகத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு, மார்ச் தொடக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மே மாதத்தோடு ஆட்சி முடிவதால், இடைக்கால பட்ஜெட்டை மட்டும் தமிழக அரசு தாக்கல் செய்கிறது. இடைக்கால பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இதை தாக்கல் செய்கிறார். இதற்கான அறிவிப்பை சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் கடந்த 8-ந் தேதி வெளியிட்டிருந்தார்.
இன்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடைக் கால பட்ஜெட் உரையை சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசிப்பார். அதைத் தொடர்ந்து சட்டசபையின் இன்றைய நிகழ்ச்சிகள் நிறைவடையும்.
முக்கியத்துவம்
பின்னர் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்தப்படும். அதில் என்னென்ன அலுவல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்? என்பதற்கான முடிவுகள் எடுக்கப்படும். பின்னர் அதுபற்றி சபாநாயகர் அறிவிப்பார்.
சட்டசபை தேர்தலுக்கு முந்தைய கடைசி கூட்டத் தொடர் என்பதால் தேர்தல் கூட்டணி தொடர் பான விவாதங்கள் முக்கியத்துவம் பெறும். இந்த இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்று சட்டசபை வட்டாரம் தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல், பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் புதிய அறிவிப்புகளையும் எதிர்பார்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது. போராட்டங்களில் ஈடுபட்டிருக் கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் அவர்களின் கோரிக்கை தொடர்பான அறிவிப்பை எதிர்பார்க்கிறார்கள்.
இந்த கூட்டத்தொடரின்போது, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் அரசின் செலவுகளுக்கு தேவையான நிதியை ஒதுக்குவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும். இந்த கூட்டத்தொடர் 19-ந் தேதி வரை நடைபெறக்கூடும்.
தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள்
தமிழக சட்டசபையில் சபாநாயகரை தாக்க முயன்றதாக குற்றம்சாட்டி, தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களான எதிர்க்கட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ், கட்சிக்கொறடா சந்திரகுமார் மற்றும் தினகரன், வெங்கடேசன், பார்த்திபன், சேகர் ஆகியோர் கடந்த ஆண்டு பிப்ரவரி 20-ந் தேதி அன்று இடைக்கால நீக்கம் செய்யப்பட்டனர்.
ஆனால் இடைக்கால நீக்க உத்தரவை ரத்து செய்து சில நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்தது. அந்த உத்தரவின் நகலை அவர்கள் சட்டசபை செயலாளரின் அறைக்கு நேற்று காலையில் கொண்டு வந்தனர். ஆனால் செயலாளர் டெல்லி சென்றிருப்பதாக அவரது உதவியாளர் கூறியதை அடுத்து, கோரிக்கை மனுவுடன் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் நகலை உதவியாளரிடம் கொடுத்தனர். அதற்கான ஒப்புகை சீட்டையும் பெற்றுக்கொண்டனர்.
சலுகைகள் வேண்டும்
பின்னர் நிருபர்களிடம், சந்திரகுமார் கூறியதாவது:-
4 நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும், எங்களது சம்பளம், அலுவலகம், குடியிருப்பு போன்றவற்றுக்கான, இதுவரை பறிக்கப்பட்டிருந்த சலுகைகளை அரசு இன்னும் தரவில்லை. கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், எங்களை இந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடருவோம்.
தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அவை பற்றி இந்த கூட்டத்தொடரில் பேச இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனுமதி உண்டா?
இதுபற்றி நேற்று பிற்பகல் 5 மணி அளவில் சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தமிழக சட்டசபைக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருந்து தீர்ப்பின் நகல் இன்னும் வரவில்லை என்று கூறினார். தே.மு.தி.க.வின் 6 எம்.எல்.ஏ.க் கள் இன்று சட்டசபைக்குள் வருவதற்கு இது தடையாக இருக்குமோ? என்று கேட்டதற்கு சட்டசபை வட்டாரத்தில் இருந்து பதில் கிடைக்கவில்லை.








