பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங் மூலம் பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, நாளை முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை அண்ணா பல்கலை, இன்று வெளியிடுகிறது.இதுகுறித்து, அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம் அளித்த பேட்டி:அண்ணா பல்கலையின் இணையதளத்தில், https:/www.annauniv.edu/, TNEA 2016 என்ற தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் பணிக்கான, 'லிங்க்' இணைக்கப்படுகிறது. இதில், மாணவர்கள், தங்கள் பெயர், படிப்பு உள்ளிட்ட விவரங்களை, ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். தற்போது, பிளஸ் 2 தேர்வு முடிவு வராத நிலையிலும், மற்ற விவரங்களை நிரப்பி விடலாம்.
இந்த விண்ணப்ப பதிவை, தனியார் இணைய மையங்கள், தங்கள் சொந்த கணினி மற்றும் அரசின், இ - சேவை மையங்கள் மூலமும் மேற்கொள்ளலாம். இதேபோல், விண்ணப்ப கட்டணத்தை, டி.டி.,யாகவும் எடுக்கலாம். அதற்கு பதில், 'ஆன்லைனில் நெட் பேங்கிங்' முறையிலும் பணம் செலுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.








