சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் உள்ள பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச், 1ல் துவங்கி ஏப்ரலில் முடிந்தது; இதில், 10.67 லட்சம் பேர் பங்கேற்றனர். இதற்கான தேர்வு முடிவுகள், நேற்று காலை, 11:00 மணிக்கு cbse.nic.in மற்றும் cbseresults.nic.in இணையதளங்களில் வெளியாகின.
* டில்லி, அசோக் விஹாரில் உள்ள மாண்ட்போர் பள்ளி மாணவி சுக்ரிதி குப்தா ஆங்கிலம், கணிதம் மற்றும் கணினி அறிவியலில் 99; இயற்பியல் மற்றும் வேதியியலில் 100 மதிப்பெண்கள் என 500க்கு 497 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றார்.
* சென்னை, கே.கே.நகர், பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளி மாணவர் அஜீஷ் சேகர் இயற்பியல், வேதியியல் மற்றும் கணினி அறிவியலில் தலா 99 மதிப்பெண்கள்; ஆங்கிலம், 98 மற்றும் கணிதத்தில் 100 மதிப்பெண்கள் என மொத்தம் 495 மதிப்பெண், மற்றும்
அரியானா மாநிலம், புனித தெரசா கான்வென்ட் பள்ளி மாணவி சோம்யா உப்பல் 495 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில் மூன்றாமிடம் பெற்றனர்.
* மாற்றுத்திறனாளி மாணவர்களில், அரியானா மாநிலம், டி.ஏ.வி., பப்ளிக் பள்ளி முதிதா ஜகோடா, 485 மதிப்பெண்ணுடன் தேசிய அளவில் முதலிடம்; உ.பி., மாநிலம், நொய்டாவில் உள்ள ஆர்.கே.புரம் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் சித்தார்த் பிஸ்வாஸ், 484 மதிப்பெண்ணுடன் தேசிய அளவில் இரண்டாமிடம்; உ.பி., அமிட்டி சர்வதேச பள்ளி மாணவர் ரக்சித் மாலிக், 482 மதிப்பெண்ணுடன் தேசிய அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.
மிகவும் கடினமாக இருந்ததாக கூறப்பட்ட கணிதத் தேர்வில், பலர், 'சென்டம்' எடுத்துள்ளனர்.
* சென்னை மண்டலத்தில், 225 பள்ளிகளைச் சேர்ந்த 54 ஆயிரத்து 756 பேர் பங்கேற்றனர்; 50 ஆயிரத்து 720 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் - 96.73
* புதுச்சேரியில் 10 பள்ளிகளைச் சேர்ந்த 449 பேர் தேர்வு எழுதி, 446 பேர் தேர்ச்சி பெற்றனர்.








