தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அதன் இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் இளம் அறிவியல் பிரிவில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல் உள்ளிட்ட 6 படிப்புகளும், இளம் தொழில்நுட்பப் படிப்புகளில் உயிரி தொழில்நுட்பவியல், உயிரி தகவலியல் உள்ளிட்ட 7 படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளில் ஆண்டுதோறும் சுமார் 2,600 மாணவ-மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர்.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து ஏராளமான மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பி வருகின்றனர்.
மாணவர் சேர்க்கைக்காக சனிக்கிழமை வரையிலும் 10,625 மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். அவர்களில் 8,258 பேர் படிவங்களைப் பூர்த்தி செய்து, விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு 42 ஆயிரம் மாணவ-மாணவிகள் வரை விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து 32 ஆயிரம் பேர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பியிருந்தனர்.
மேலும், ஜூன் 11-ஆம் தேதி வரை மட்டுமே விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்ப முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து ஜூன் 27-ஆம் தேதி முதல் கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.








