கோடை மழை
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி, அக்னி நட்சத்திரம் நடைபெற்று வருகிறது. கடந்த பல வருடங்களுக்கு முன்பு அக்னி நட்சத்திரம் கால கட்டத்தில் மழை பெய்தது. இதன் காரணமாக அந்த வருடம் கோடை வெயில் மறைந்து போனது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காற்றழுத்த தாழ்வு மையம்
தென்மேற்கு வங்ககடலில் இலங்கை அருகே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் நாளை(சனிக்கிழமை) உருவாகிறது. அது மேலும் வலுப்பெற்று 16-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவது பற்றி தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக வாழப்பாடியில் 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய சில பகுதிகளிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழைபெய்யும்.
நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
மழை அளவு
வாழப்பாடி 6 செ.மீ., பாளையங்கோட்டை, திருச்சுழி, தாராபுரம், உத்தமபாளையம் தலா 5 செ.மீ., நாகர்கோவில், பெரம்பலூர், பெருங்களூர், பெரியாறு, தக்கலை தலா 4 செ.மீ., உடுமலைப்பேட்டை, சூளூர், பாபநாசம், கூடலூர், மன்னார்குடி, முசிறி, அம்பாசமுத்திரம், கீரனூர், செங்கோட்டை, கந்தர்வகோட்டை, கோவை, பெரியகுளம் தலா 3 ª.ச.மீ., வால்பாறை, தென்காசி, இலுப்பூர், சேரன்மகாதேவி, சிவகாசி, இரணியல், பூதப்பாண்டி, பொள்ளாச்சி, மணிமுத்தாறு, சித்தம்பட்டி, அருப்புகோட்டை, மதுரை விமானநிலையம் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தேர்தல் அன்று மழை
வானிலை மைய அதிகாரி ஒருவர் கூறுகையில் 14-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானால் தேர்தல் நடைபெறும் 16-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழ்நாடு முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் பலத்த மழை அநேக இடங்களில் 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மழை பெய்யும். வடமாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய உள்ளது என்றார்.








