நீங்கள் பணக்காரரா? பிச்சைக்காரரா?

பிறரிடமிருந்து நமக்கு ஏதாவது கிடைக்கிறதா? பிறர் நமக்கு எதையாவது தரமாட்டார்களா என்று எதிர்பார்ப்பது, ஏங்குவது பிச்சைக்காரத்தனம். காசு வாங்கும் பிச்சைக்காரர்கள்... சாப்பாடு எதிர்பார்க்கும் பிச்சைக்காரர்கள் மாதிரி, பிறர் உழைப்பை எதிர்பார்ப்பவரும் பிச்சைக்காரர்கள் என்கிறேன்! இது சரியா என்று யோசியுங்கள்.
""அம்மா... என் பனியன் எங்கே..? துண்டு எங்கே..?'' என்று பனியனுக்கும் துண்டுக்கும்கூட அம்மாவை எதிர்பார்க்கும் இருபது வயசுப் பாப்பாக்களாக இளைஞர்கள் இருக்கலாமா? எதெற்கெடுத்தாலும் இப்படி அம்மாவைச் சார்ந்திருப்பவர்கள் திருமணத்திற்குப் பிறகு பெண்டாட்டியைச் சார்ந்து விடுவார்கள். அதுதான் பிரச்சினை. அதனால் அம்மாவை ஓரம் கட்டுவார்கள். பிற்காலப் பிரச்சினைகளுக்கு இந்த அம்மா சார்பு ஒரு காரணம்.
தொலைக்காட்சி விளம்பரங்கள் வேறு இந்த மனோபாவத்தை வளர்க்கின்றன. படிப்பிலும் கம்ப்யூட்டரிலும் மூழ்கி இருக்கும் பிள்ளைகளுக்கு வீவாவும் காம்ப்ளானும் கொண்டுவந்து கையில் நீட்டும் விளம்பரத் தாய்மார்கள் எதிர்காலத் தலைமுறையை மெல்ல மெல்ல நாசமாக்குகிறார்கள். நமக்கு எல்லாமே பிறர்தான் செய்ய வேண்டும் என்கிற சார்பு மனோபாவம் இளைய தலைமுறையிடம் வளரக் கூடாது. அன்பும் உபசரிப்பும் குற்றம் அல்ல. ஆனால் சாக்ûஸத் துவைக்கப் போடுவது... தேடும்போது எடுத்துக் கொடுப்பது - யூனிஃபார்ம் அயர்ன் செய்ய ஞாபகமாகத் தருவது - புத்தகங்களையும் தொலைத்த பொருள்களையும் தேடித் தேடி எடுத்துக் கொடுப்பது, இவை யாவும் அம்மா, அக்கா, அண்ணா, அப்பாவின் வேலைகள் என்று பிறரைச் சார்ந்து வளரும் பண்பு வளரக் கூடாது.
நாம் நமது காலில் நிற்க முடியாமல் போனால் உடல் ஊனம் என்கிறோம். வாழ்க்கையில் பிறரைச் சார்ந்திருப்பதும் ஒருவகை ஊனமே. இந்த ஊனம் வெற்றியின் விரோதி. எனவே இதை விட்டு விலகிச் சொந்தக் காலில் நில்லுங்கள். இல்லையேல் தமிழ்நாடு காங்கிரஸ் மாதிரி நொந்து நூலாகி விடுவீர்கள்.
உழைப்புக்குத் தயாராக இருப்பவர்கள் ஒருபோதும் தோற்பதில்லை. இன்னொன்று... முதுமை அவர்கள் உடலில் இடம் கேட்பதில்லை. "திருச்சியின் அழகிய கிழவர்' கேள்விப்பட்டதுண்டா? முத்தமிழ்க் காவலர் அமரர் கி.ஆ.பெ. விசுவநாதன் அவர்கள். நெடிய உருவம், அழகிய வடிவம். எண்பது வயதிலும் மிடுக்கான நடை. கம்பீரமான பிசிறில்லாத குரல்... தடுமாற்றம் இல்லாத பேச்சு... பல்லாண்டுகட்கு முன்பு ஒரு விழாவுக்காகச் சென்னை வந்த அவரை, ரயில் நிலையத்தில் வரவேற்று அழைத்துப் போகக் காத்திருந்தேன். பயணக் களைப்பே இன்றி ரயிலில் இருந்து இறங்கினார். கையில் இருந்த சின்னப் பெட்டியை, மரியாதை நிமித்தம் வாங்குவதற்குக் கை நீட்டினேன்.
""விடு... பெட்டியைப் பிறரிடம் கொடுத்துத் தூக்கச் சொல்லுமளவு எனக்கு வயதாகவில்லை'' என்று கூறியபடி விடுவிடு என்று நடந்தார். அப்போது அவர் வயது எழுபது! எழுபது வயதிலும் பிறர் உழைப்பை, உதவியை எதிர்பாராத பெருஞ்செல்வம் அவர் மனத்தில் இருந்தது. அதனால்தான் அவர் "திருச்சியின் அழகிய கிழவர்' எனப்பட்டார். பிறர் உழைப்பை எதிர்பாராததே அவர் இளமையின் இரகசியம்.
அண்மையில் மூன்று திருமணமாகாத இளைஞர்கள் குடியிருக்கும் அறைக்குள் போக நேர்ந்தது. க்ஷஹஸ்ரீட்ங்ப்ர்ழ்ள் க்ங்ய் என்பது சரிதான். களைந்த நிலையிலேயே சுருண்ட ஜட்டிகள் நாலைந்து ஆங்காங்கே. பூமியில் வட்ட வடிவில் கழற்றி விடப்பட்ட லுங்கிகள். அடைத்து வைக்கப்பட்ட ஜன்னல்கள். குடலைக் குமட்டும் விவரிக்க முடியாத வாசனைக் கலவை... ""ஜன்னலைத் திறக்கக் கூடாதா?'' என்றேன். ""யாரு திறக்கறது... யாரு அடைக்கிறது... போர் அடிக்கிற வேலை சார்... அது... ஞாபகமா சாயங்காலம் சாத்தாட்டி கொசு வரும். மழைத்தண்ணி உள்ள வந்துடும்'' என்று பெரிய பட்டியல் இட்டார்கள். ஜன்னலை நாள்தோறும் திறந்து சாத்துவது பெரிய வேலையாகத் தோன்றுகிறது அந்த இளைஞர்களுக்கு... இவர்கள் வெற்றி பெறுவார்களா? யோசியுங்கள். உழைக்கத் தயங்கலாமா?
ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த சமயம் நிதானமாகத் தமது ஷூவுக்கு பாலிஷ் போட்டு அதன் அழகை ரசித்துத் கொண்டிருந்தார். அவருடன் வெளியில் போக வேண்டி புகழ்பெற்ற பதவியாளர் ஒருவர் அங்கு வந்தார். அதிர்ச்சியுடன், ""என்ன மிஸ்டர் லிங்கன்... உங்கள் ஷூவுக்கு நீங்கள் பாலிஷ் போடுகிறீர்கள்?'' என்று இழுத்தார். ""ஏன்... நீங்கள் வேறு யார் ஷூவுக்கு பாலிஷ் போடுவீர்கள்?'' என்று கேலியாகத் திருப்பினார் லிங்கன். உடல் உழைப்பு கேவலமானது அல்ல. உழைக்க மறுப்பவர்கள் சோம்பேறிகள். பிறர் உதவியை எப்போதும் எதிர்பார்ப்பவர்கள் ஒருவகையில் பிச்சைக்காரர்களே!
உழைப்பை நேசிப்பவர்களுக்குப் பொற்காலம் காத்திருக்கிறது. வெற்றி நிச்சயம். #வெற்றி நிச்சயம் என்ற நூலில் திரு.சுகிசிவம்