தமிழகத்தில் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள், அரசு உதவிபெறும்
கல்லுாரிகள், ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் போன்றவற்றில், குறைந்த
சம்பளத்தில் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை, தனியார்
கல்லுாரிகள் பல பணிகளுக்கு பயன்படுத்துகின்றன. குறிப்பாக, தங்கள்
நிறுவனத்தை சேர்ந்த மற்ற பள்ளி, கல்லுாரிகளில், பேராசிரியர்களை பாடம்
எடுக்க பயன்படுத்துகின்றனர்.
பேராசிரியர்களும், வேறு
வழி இல்லாமல் தங்கள் நிறுவனம் உத்தரவிட்டபடி, ஒரு கல்லுாரியில் பணிக்கு
சேர்ந்து விட்டு, நிறுவனம் சார்ந்த மற்ற பள்ளி, கல்லுாரிகளில்
பணியாற்றுகின்றனர்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கு, பேராசிரியர்கள் தரப்பில் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. இதை
விசாரித்தபோது, புகாரில் உண்மை இருப்பது, பல்கலைக்கு தெரியவந்தது.
இதையடுத்து,
அனைத்து கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை. துணைவேந்தர்
தங்கசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சில ஆசிரியர் கல்வியியல் கல்லுாரி
நிர்வாகங்கள், தங்கள் பேராசிரியர்களை, வேறு கலை, அறிவியல் கல்லுாரி,
நர்சிங் கல்லுாரிகளில் பாடம் எடுக்க கட்டாயப்படுத்துவதாக புகார்
வந்துள்ளது. இது, விதிகளுக்கு எதிரானது.
தேசிய ஆசிரியர்
கல்விக்கவுன்சிலின் விதிகளை மீறி, பேராசிரியர்களை மற்ற நிறுவனங்களுக்கு
பயன்படுத்தினால், அந்த நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது