அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உயர் தொழில்நுட்பக் கல்வி பயில வருகை தரும்
மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று நியூஜெர்சி
கே.ஐ.சி.பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை உதவி அதிகாரி ஜோடிலேர் வெயிட்
கூறினார்.
சேலையூர் பாரத் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அமெரிக்க
உயர்தொழில்நுட்பக் கல்வி வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கில் அவர்
பேசியதாவது:
அமெரிக்காவில் உள்ள 4,500 கல்லூரிகளில் 2.13 கோடி மாணவர்கள் உயர்கல்வி பெற்று வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளாக உயர் தொழில்நுட்பக் கல்வி பயில சீனா, இந்தியா, ஜப்பான்,
பிரிட்டன்,பிரான்ஸ், மலேசியா, தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச்
சேர்ந்த மாணவர்களின் வருகை 8.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தற்போது அமெரிக்காவில் 8 லட்சத்து 86 ஆயிரத்து 52 வெளிநாட்டு மாணவர்கள்
உயர் தொழில்நுட்பக் கல்வி பயின்று வருகின்றனர். வணிக மேலாண்மை, பொறியியல்,
கணினி பொறியியல் தொழில்நுட்பம், கணிதவியல் ஆகியப் படிப்புகளைப்
பெரும்பான்மையான மாணவர்கள் தேர்வு செய்து பயின்று வருகின்றனர்.
உலகின் மிகச் சிறந்த 500 தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் உயர்
பதவிகளில் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பயின்ற மாணவர்கள்தான்
வேலைவாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர் என்றார் அவர்.