தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத்
தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வார்டுகள்
மறுவரையறை செய்து, சுழற்சி முறை இடஒதுக்கீட்டை வழங்க
வேண்டும் உள்ளிட்டவைகளை முன்வைத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக
மற்றும் பாமக சார்பில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் ஒன்றாக, கடந்த 6ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்தில்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில், நீதிபதிகள் ஹூலுவாடி
ஜி.ரமேஷ், கே.ரவிச்சந்திரபாபு, மாநிலத் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க
வேண்டும் என்று, வழக்கை செப்.8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இதையடுத்து,
இந்த வழக்கு நேற்று, இதே டிவிசன் பெஞ்ச் முன்பாக விசாரணை நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இதுகுறித்து நாளையும் (இன்று) விசாரணை
நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று மீண்டும் அதே டிவிசன் பெஞ்ச் முன்பாக விசாரணை
நடைபெற்றது. இந்த விசாரணையில், மாநில தேர்தல் ஆணையம் சார்பில்
வாதிடும்போது, தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 974 உள்ளாட்சி
பதவிகளுக்கு தேர்தல் நடத்தவேண்டியுள்ளது. ஊராட்சிகளில், ஒரு வாக்காளர் 4
ஓட்டுகளைப் பதிவுசெய்ய வேண்டும். ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் 4
ஓட்டுகளைப் பதிவுசெய்ய முடியாது. ஒரு பதவிக்கு ஒரு ஓட்டு இயந்திரம் என்று
கணக்கிட்டால், சுமார் 5 லட்சம் ஓட்டு இயந்திரங்கள் தேவைப்படும். மேலும்
மின்னணு இயந்திரம் பயன்படுத்துவது குறித்து உள்ளாட்சித் தேர்தல் விதிகளில்
கிடையாது. எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பெண்கள் போட்டியிடும் உள்ளாட்சிப்
பதவிகள் வரையறை செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் சார்பில்
தெரிவிக்கப்பட்டது.
திமுக தரப்பில், மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், வழக்கறிஞர்
என்.ஆர்.இளங்கோ ஆகியோர் வாதாடினர். அவர்கள் கூறுகையில், 5 லட்சம் மிஷின்கள்
என்பது கிடையாது. இரண்டரை லட்சம் மிஷின்கள் மட்டும்தான் வாங்க வேண்டும்.
(தேர்தல் ஆணையம் 5 லட்சம் என்று கூறுவது ஓட்டுப்போடும் ஒரு யூனிட்,
பதிவாகும் ஒரு யூனிட் என இரண்டு யூனிட்டுகளைச் சேர்த்து) அதுவும், தேசிய
தேர்தல் ஆணையத்திடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் ஆணையம் இந்த
மிஷின்களை வழங்குகிறது என்று தெரிவித்தார்கள்.
பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு வாதிடுகையில், உள்ளாட்சித் தேர்தல்களில்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.
மற்ற மாநிலங்களிலும் இதுபோன்று பயன்படுத்தப்படுகிறது. ஊராட்சிகளில் நான்கு
ஓட்டுகள் என்றால்கூட, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் மின்னணு
இயந்திரங்களைப் பயன்படுத்தலாம் என்றார்.
அதற்குப் பதிலளித்த நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாகவும்
வெளிப்படைத்தன்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்றால், அவர்கள் (திமுக,
பாமக)கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்று, மாநில தேர்தல் ஆணையத்திடம்
கேள்வியெழுப்பினர். மேலும் பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு
இயந்திரத்தைப் பயன்படுத்தலாமே என்றுகூறிய நீதிபதிகள், இந்த வழக்கின்
தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக, சென்னை
உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில், 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவற்றின் விவரம்:
1. உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
2. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வார்டுகள் மறுவரையறை செய்து, சுழற்சிமுறை இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.
3. உள்ளாட்சித் தேர்தல்களில் மத்திய அரசு ஊழியர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
4. சட்டமன்ற தேர்தல்களைப்போல், வேட்பாளர்களின் உறுதிமொழிப் பத்திரம்
(அபிட்டவுட்) உள்ளிட்டவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
5. உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து வார்டுகளின், வாக்கு எண்ணிக்கைகள் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும்.
6. ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வாக்குச்சீட்டுக்கான வாக்குப்பெட்டிகள்
தனித்தனியாக வைக்கப்பட வேண்டும். (இதுவரை கவுன்சிலர், தலைவர், வார்டு
உறுப்பினர் என வாக்குச்சீட்டுகள் அனைத்தும் ஒரே பெட்டியில் போடப்படும்)
இந்த 6 மனுக்களின்மீதான தீர்ப்பை, நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.