வரும் 2019ம் ஆண்டு கல்வியாண்டிற்குள் அனைத்து அரசுபள்ளிகளிலும் கழிப்பறை
வசதி ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
அதிருப்தி:
மதுரையை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தினமலர்
நாளிதழில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி , அரசு பள்ளிகளில் கழிப்பறை
வசதியை முழுமையாக ஏற்படுத்த வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.
இது
குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.இந்த மனு விசாரணைக்கு வந்த போது, பள்ளிக்கல்வித்துறை
செயலாளர் மற்றும் இயக்குநர் தாக்கல் செய்த அறிக்கை மீது அதிருப்தி
அடைந்தனர். இதனையடுத்து, அரசு பள்ளிகளில் எத்தனை நாட்களில் கழிப்பறை
கட்டப்படும் என விரிவான அறிக்கையை நவ.,22க்குள் தாக்கல் செய்ய வேண்டும்
எனக்கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
எச்சரிக்கை:இந்த மனு
மீதான விசாரணை இன்று மீண்டும் நடந்தது. அப்போது நீதிபதிகள் நாகமுத்து,
கிருஷ்ணகுமார் மனுவை விசாரித்தனர். தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டு முதல்,
2019ம் ஆண்டு கல்வியாண்டிற்குள் அரசு பள்ளிகளில் கழிப்பறை கட்ட வேண்டும்.
அரசு பள்ளிகளில் இரவுக்காவலர் நியமிக்கப்படுவதுடன், சுகாதார
பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் சுற்றுச்சுவர் அமைக்க
வேண்டும். தற்போது அரசு பள்ளி கழிப்பறைகளின் நிலை 2019க்குள் மாற வேண்டும்.
கழிப்பறைகள் சுத்தமில்லாமல் உள்ளதாக புகார் வந்தால், கலெக்டர் மற்றும்
கல்வித்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என
எச்சரிக்கை விடுத்தனர்.