
ஃபேஸ்புக், ட்விட்டர் என சமுகவலைதளங்களின் ஆதிக்கம் ஊடுருவியுள்ள இந்த
டிஜிட்டல் காலத்திலும் 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதை
பிரதமர் மோடியின் அரசு ரகசியமாக வைத்திருந்து இன்று அறிவித்துள்ளது.
2017-ம் ஆண்டு புத்தாண்டு தொடக்கத்தில் மக்களிடம் பழைய, ரூ 500, ரூ 1,000
நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது.
திடீரென இப்படி ரூபாய் நோட்டுகள்
செல்லாது என மத்திய அரசு அறிவிப்பது தற்போதைய தலைமுறைக்கு ஆச்சர்யமாக
இருக்கலாம். ஆனால், இதற்கு முன்பு இதே போல இரண்டு அதிர்ச்சி சம்பங்களை
இந்தியா சந்தித்துள்ளது.
''ஊழல் மற்றும் கறுப்பு பணம், வறுமை, பயங்கரவாதம் ஆகியவை நம் நாட்டை
பின்நோக்கி இழப்பதை நான் உணர்ந்தேன்" .1000,500 ரூபாய் நோட்டுகள் செல்லாது
என பிரதமர் மோடி அறிவித்த போது, கூறிய உணர்வுப்பூர்வமான வார்த்தைகள் இவை.
மோடியின் இந்த முயற்சியால், கருப்புப்பண முதலைகள் ஆட்டம் கண்டுள்ளன.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசு திடீரென அறிவிப்பது புதிதல்ல. இதற்கு
முன் இந்தியாவில் ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசும், அதற்குப் பின் மொரார்ஜி
தேசாய் அரசும் இதை செய்து இருக்கின்றன.
1946 ஆம் ஆண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் கணக்கில் வராத பணங்களை
தடுக்கும் நோக்கில் ரூ1,000 மற்றும் ரூ 10,000 ரூபாய் நோட்டுகளை தடை
செய்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1954-ல் மக்களில் வசதிகளுக்காக
5,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. ஆனால்,
மீண்டும் அரசுக்கு தலைவலியே மிஞ்சியது, கடத்தல்காரர்கள் லட்ச லட்சமான
பணத்தைச் சுலபமாகக் கடத்க்ச் சென்றனர். வேறு வழியின்று 1978-ல் 5000 ரூபாய்
நோட்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டன. அதன்பிறகு தற்போது தான் ரூபாய்
நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பிண்ணனியில் மோடி அரசின்,
நம்பகத்தன்மை அடங்கியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. 1946 மற்றும்
1978-ல் இந்தியவின் வளர்ச்சியை தடுக்கும் மலையளவு கருப்பு பணம் இல்லை.
ஆனால் 1990க்கு பிறகு கருப்புப்பணம் பதுக்கல் என்பது புதுப் பரிமாணத்துடன்
வளர்ந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள
கருப்புப்பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்சம் வழங்குவோம்
என்கிற வாக்குறுதியை 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடி
முன்வைத்தார். மோடி அரசின் மிக முக்கியமான வாக்குறுதியாக கருதப்பட்டது இது.
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வாக்குறுதியை மோடி மறந்துவிட்டார் என்று
நாடு முழுவதிலும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் அதிரடி
நடவடிக்கையால், தனது செல்வாக்கை மீட்டிருக்கிறார் மோடி.