'தினமலர்' மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து வழங்கும், வழிகாட்டி நிகழ்ச்சியில், இரண்டாம் நாளான நேற்று, இன்ஜினியரிங், ஆட்டோமேஷன், ஐ.டி., துறை மற்றும் சி.ஏ., என்ற ஆடிட்டர் படிப்பு குறித்தும், 'நீட்' தேர்வுக்கு தயாராகும் முறை குறித்தும், கல்வியாளர்கள் ஆலோசனை அளித்தனர்.
கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி: எந்த கோர்ஸ் படித்தாலும், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டத்தில் மாற்றம் வர வேண்டும். மாணவர்கள் வெறும் பாட புத்தகத்தை படிக்காமல், தொழிற்சாலை, தொழில் நிறுவனங்களுக்கு என்ன தேவையோ, அதை படித்தால் மட்டுமே வேலை கிடைக்கும். படிக்கும் போதே திறனை வளர்த்து கொள்ள வேண்டும். எதில், வாய்ப்பு, வளர்ச்சி என்பதை தெரிந்து, படிப்புகளை தேர்வு செய்யுங்கள். இன்ஜினியரிங் துறையில் மட்டுமே, ஆண்டுக்கு, மூன்று லட்சம் வேலை வாய்ப்புகள் உறுதியாக கிடைக்கின்றன. படிக்கும் போதும், வேலையில் சேர்ந்த பிறகும் போராட்டங்களில் ஈடுபடாதீர்கள். சமீபத்தில், தமிழகத்தில் போராட்டங்களில் ஈடுபட்ட, 458 பேரை, கார்ப்பரேட் நிறுவனங்கள் வேலையை விட்டு வெளியேற்றி உள்ளன. படிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது போல, கல்லுாரியை தேர்வு செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு கல்வியாளர்கள் பேசினர்.








