60 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் பி.இ. மாணவர் சேர்க்கை: 6 நாள்களில் முடிகிறது கலந்தாய்வு.
இயந்திரவியல், சிவில் பிரிவுகளில் குறைந்தது ஆர்வம்: இந்த நிலையில், 2017 -18 பி.இ. கலந்தாய்வு முடியஇன்னும் 6 நாள்களே உள்ள நிலையில், தொடக்க நாள் முதல் அதிக மாணவர்கள் தேர்வு செய்யும் பிரிவுகளாக கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் பிரிவுகளேஇருந்து வருகின்றன. பி.இ. கணினி அறிவியல் பிரிவில் மொத்தமுள்ள 27,695 இடங்களில் இதுவரை 9,500 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் பிரிவில் மொத்தமுள்ள 33,881 இடங்களில் இதுவரை 12,000 பேர் சேர்ந்துள்ளனர். ஆனால், பி.இ. இயந்திரவியல் பிரிவில் மிக அதிகமாக 38,333 இடங்கள் உள்ளன. இதில் 11,000 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். அதுபோல பி.இ. சிவில் பிரிவில் 25,237 இடங்களில் 5,000 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.
60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில்...:
ஒற்றைச் சாளர கலந்தாய்வு முடிவடைய இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில், 60 -க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது என்கின்றனர் பொறியியல் சேர்க்கை அதிகாரிகள்.மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பி.இ. இயந்திரவியல், பி.இ. சிவில் பிரிவுகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சேர்க்கை நடைபெற்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 115 இடங்களும், மின்னணுவியல் -தொடர்பியல் பிரிவில் 116 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 120 இடங்களும் நிரம்பாமல் உள்ளன. திருவள்ளூரில் உள்ள ஒரு கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 122 இடங்களும், மின்னணுவியல் -தொடர்பியல் பிரிவில் 140 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 65 இடங்களும் நிரம்பாமல் உள்ளன. கன்னியாகுமரியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 111 இடங்களும், சிவில் பிரிவில் 72 இடங்களும், மின்னணுவியல் -தொடர்பியல் பிரிவில் 72 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 38 இடங்களும் நிரம்பாமல் உள்ளன.
காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 72 இடங்களும், மின்னணுவியல் -தொடர்பியல் பிரிவில் 73 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 74 இடங்களும் நிரம்பாமல் உள்ளன. இதேபோல, விழுப்புரம், திருச்சி, நாமக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 60 -க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் சேர்க்கையும், நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இயந்திரவியல், சிவில் பிரிவுகளில் ஒற்றை இலக்கத்தில் சேர்க்கையும் நடைபெற்றிருப்பது அண்ணா பல்கலைக்கழக புள்ளி விவரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.








