புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை நிறைவேற்ற
வலியுறுத்தி, தொடர் மறியலில் ஈடுபட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்புக்குழு முடிவு
செய்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் விதி எண் 110ன்
கீழ் அறிவித்தபடி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய
திட்டத்தை கொண்டு வர வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஜாக்டோஜியோ
ஒருங்கிணைப்பு குழு நீண்டநாட்களாக வலியுறுத்தி வருகிறது. இதை கண்டித்து,
கடந்தாண்டு நடந்த போராட்டம் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவால் திரும்ப
பெறப்பட்டது. இவ்வழக்கு, நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் புதிய ஓய்வூதியத்
திட்டத்தை ரத்து செய்வது உட்பட, 11 அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி, தொடர்
போராட்டங்களில் ஈடுபட சென்னையில்நடந்த ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்புக்குழு
கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் பார்த்திபன், ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலருமான பேட்ரிக்
ரெய்மண்ட் ஆகியோர் கூறியதாவது: கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட
தலைநகரங்களில், ஜன., 6 தொடர் முழக்க போராட்டம், ஜன., 3ல் மாவட்ட
கூட்டங்கள், ஜன., 9, 10 ல் அனைத்து அரசியல்கட்சி தலைவர்கள், சட்டசபை
கட்சித் தலைவர்களை சந்திப்பது, பிப்., 4ல் சென்னையில் கருத்தரங்கு
நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
கோரிக்கைகளை நிறைவேற்றாதபட்சத்தில், மதுரையில் இம்மாத இறுதிக்குள் நடக்கும்
உயர்மட்டக்குழு கூட்டத்தில் தொடர் மறியல் போராட்ட தேதியை அறிவிப்பது என
முடிவு செய்யப்பட்டது.இவ்வாறு கூறினர்.