அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் திறந்த வெளிக்கிணறுகள்
மற்றும் மின் இணைப்பு செல்லும் பகுதிகள் பாதுகாப்பான நிலையில் இருப்பதை,
அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென கல்வித்துறை
அறிவுறுத்தியுள்ளது.
அரசு, அரசு உதவிபெறும், அனைத்து தனியார் பள்ளிகளிலும் படிக்கும்
மாணவர்களுக்கு, பாதுகாப்பான சூழல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள,
கல்வித்துறை அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும்
அறிவுறுத்தியுள்ளது.தொடக்கக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள்,
மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களைக் கொண்டு குழு
அமைக்க வேண்டும்.
இக்குழுவினர், அனைத்து பள்ளிகளிலும், திறந்த வெளிக் கிணறுகள், மின் இணைப்பு
செல்லும் பகுதி, கழிவுநீர் கால்வாய் குழிகள், மூடிய நிலையிலும்,
குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்காத வகையில் அமைந்திருப்பதை
உறுதிபடுத்திக்கொள்ள, ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.பள்ளிக்கு அருகில் உள்ள
பகுதிகளையும் பார்வையிட்டு, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ள
வேண்டும். ஆய்வின் போது, பாதுகாப்பில்லாத வகையில், கழிவுநீர் தொட்டிகள்,
மின் இணைப்புகள், கிணறுகள் பள்ளிகளில் காணப்பட்டால், முதன்மைக் கல்வி
அலுவலர்கள் மூலம் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.