நேற்று எங்கள் மாவட்டத்தில் மேலும் ஒரு புது முயற்சி தொடங்கியது.ஒரு ஆசிரியை,எங்கள் முதன்மை கல்வி அலுவலரை அணுகி,10,000 ரூபாயை கொடுத்து,இதை நீங்கள் முன்னெடுத்திருக்கும் கின்னஸ் உலக சாதனை செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்திருக்கிறார். முதன்மைக் கல்வி அதிகாரி அவர்கள் அசந்து போய்...இதை நம் மாவட்ட ஆட்சியர் கையில் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லி அனுப்ப,அந்த ஆசிரிய பெருந்தகை அங்கே சென்று,கலெக்டர் கையில் பணத்தைக் கொடுக்க,நம் கலெக்டர் அய்யா அசந்து போய்...அட இப்படியும் ஆசிரியர்களா என வியப்பின் உச்சத்தில்,புதிதாய் ஒரு திட்டத்தை செயல்படுத்தினால் என்ன என ஒரு நிமிடத்தில் யோசித்து, ஒரு மணிநேரத்தில் முடிவெடுத்து, என் குழந்தை என் பொறுப்பு எனும் பொருள் படும்படி My child My care என்ற திட்டத்தை ஆரம்பித்து விட்டார்.
இதில் சேரும் நிதியை மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டு நேற்றைக்கே அது அமல்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் எப்போதும் ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன என்பதும்,சட்டையில் பொத்தான் கூட இல்லாத குழந்தைகளுக்கு ஏதோ நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணமும்,அரசு தரும் இலவச குறிப்பேடுகள் போதாமல் எத்தனையோ ஏழைக் குழந்தைகள் இருக்கின்றன. அவர்களது கல்வி செலவுக்கு தர வேண்டியும் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டத்தை அண்ணாமலையாரின் ஆசியுடன் உயர்த்திபிடிக்கும் நோக்கத்தில் நம் மாவட்ட ஆட்சியரும்,முதன்மைக் கல்வி அலுவலரும் இணைந்து களம் கண்டிருக்கின்றனர்.
அந்த முயற்சியின் முதல் கட்ட கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்ட முடிவில் வந்திருந்த ஆசிரியர், உதவிக்கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள்,பல்வேறு அலுவலகங்களில் இருந்து வந்திருந்த அலுவலர்கள் ஆகியோர் மொத்தமாகவும் தனித்தனியாகவும் தங்களது பங்களிப்பை கொடுத்தனர். எனக்கும் அழைப்பு வர,நானும் கணவரும் இணைந்து 10,000 ரூபாயை மாவட்ட ஆட்சி தலைவர் திரு.கந்தசாமி அவர்களிடம் வழங்கினோம்.
மாவட்ட கல்வி வளர்ச்சியின் மையமாக திகழும் இந்த திட்டத்தில் வேறு மாவட்டங்கள்,மாநிலங்கள்,நாடுகளில் உள்ள கல்வி ஆர்வலர்களும் பங்களிப்பை நல்குவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.நீங்கள் உங்கள் பங்களிப்பை நேரடியாக கலெக்டரிடமே கொடுக்கலாம்.100 ரூபாய் முதல் லட்சம் வரை நீங்கள் பூச்சியத்தை போட்டுக்கொண்டே செல்லலாம்.ஆனால் முன்புறம் ஒன்றோ,இரண்டோ எண்ணைப் போட மறந்து விடாதீர்கள் என்று கூறியிருக்கிறார். ஒரு நாள் ஒரு ஹோட்டலில் குடும்பத்துடன் சாப்பிடும் செலவு ....ஒரு குழந்தையின் கல்விக்கு பயன்படக்கூடும் எனில் அதை தருவதில் நாம் மகிழலாம்.வாருங்கள்!திருவண்ணாமலை அழைக்கிறது!