மரம் அறுக்கும் தொழிலாளியாக முடங்கிப் போகாமல், சோதனைகளை சாதனைகளாக்கிய சிவகுரு எப்படி சாதித்தார்? முன்னேறத் துடிக்கும் அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்கும் அவரைப் பற்றி அவசியம் அறிந்துகொள்வோம்.
சாதாரணமாக நம்முடன் வாழ்பவர்கள் தம் விடாமுயற்சியால் சாதனையாளராவது வழக்கமான ஒன்றுதானே என்று நினைக்கலாம். வறுமை, நேரமின்மை, குடும்பச் சூழல் என அத்தனை தடைகளையும் உடைத்து இன்று தமிழருக்குப் பெருமை சேர்த்திருக்கும் சிவகுரு நம் இளைய சமுதாயத்துக்கு ஒரு முன்னுதாரணம்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள மேலவட்டங்காடு எனும் சாதாரண குக்கிராமத்தில் விவசாயின் மகனாக பிறந்தவர் சிவகுரு பிரபாகரன். அவரது பாதை முட்களால் நிறைந்தது. நம்மால் முடியாது என்று நினைக்கும் சராசரியான நபர் ஒருவராவது இதன் மூலம் சாதிக்கும் முயற்சியில் இறங்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம்.
மாணவர்களுக்கு மட்டுமல்ல, வெல்ல நினைக்கும் அனைவருக்கும் சிவகுரு பிரபாகரன் கடந்து வந்த பாதை ஓர் உற்சாக டானிக்!
ஐஏஸ் தேர்வில் வெற்றி பெற்ற சிவகுரு பிரபாகரனை 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் வாழ்த்து சொல்லி பேட்டி கண்டோம். அவர் கூறியதாவது:
சாதாரண கிராமத்து மொழியில் அவர் சரளமாக உரையாடினார்…
உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, ஒரு அக்கா, ஒரு தம்பி என்று சிறிய குடும்பம் என்னுடையது. நாங்கள் முதல் தலைமுறைப் பட்டதாரிகள். அப்பா 5-வது வரை படித்தவர். விவசாயம், மர அறுவையும் தெரியும், அம்மா படிக்காதவர்கள். குடும்பத்துக்கு உதவியாக முடை பின்னி விற்பது, பால் கறந்து விற்பது என்று வாழ்ந்து வருபவர்.
அடைந்திருக்கும் இடம் பெரியது.. ஆரம்பம் எங்கே?
மேலவட்டங்காடு பட்டுக்கோட்டை வட்டம், பக்கத்தில் உள்ள ஊராட்சிப் பள்ளியில் 5-ம் வகுப்பு வரையிலும், அதன் பின் புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தேன். தமிழ் மீடியம் தான். ஆனால் பள்ளியில் முதல் மாணவனாக இருந்தேன்.
பள்ளிப் படிப்பின் போதே வீட்டில் வறுமை. பொறியியல் படிப்பு என் கனவு. ஆனால் முடியவில்லை. ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் இணைந்தேன். இரண்டு ஆண்டுகள் என் பெரியம்மாவின் ஊரில் தங்கி விவசாய வேலை பார்த்துக்கொண்டே ஆசிரியர் பயிற்சியை முடித்தேன்.
குடும்ப வறுமை ஒழிந்து, கனவு நனவானதா?
இல்லை.. பொறியியல் தான் என் கனவு. அதன் பின்னரும் வீட்டின் குடும்ப சூழல் காரணமாக என் பொறியியல் கனவை ஒத்திவைத்துவிட்டு மரம் அறுக்கும் மில்லில் வேலைக்குப் போய் விட்டேன்.
தொழிலாளியாக வேலைக்குப் போய் விட்டீர்களா?
ஆமாம், இரண்டரை ஆண்டுகள் முழுநேர மரம் அறுக்கும் தொழிலாளியாக வேலை செய்தேன். அனைத்தையும் மறந்து இதுதான் வாழ்க்கையா என்ற நிலையில் இருந்தேன்.
பொறியியல் படிக்க எது தடையாக இருந்தது?
வீட்டின் வறுமை, தம்பி பொறியியல் படித்துக்கொண்டிருந்தார், அக்காவின் திருமண செலவும் ஒரு பக்கம், அதனால் பொறியியல் படிப்பு கனவாகவே இருந்தது.
பிறகு எப்படி அதை மீறி வந்தீர்கள்?
மரம் அறுக்கும் தொழிலாளியாக இருக்கும்போதே சிறுக சிறுக காசு சேர்த்தேன். ஒருநாள் நண்பர் ஒருவர் என் தம்பி படிக்கும் கல்லூரியில் அவரது தங்கைக்கு விண்ணப்பம் வாங்கப் பணம் கொடுத்தார். அந்த நேரம் என்னிடம் பணம் இல்லை அவரிடமே 500 ரூபாய் கடன் வாங்கி எனக்கும் அப்ளிகேஷன் வாங்கினேன்.
என் அப்பா, தம்பிக்கு கூட தெரியாமல் விண்ணப்பித்தேன். வீட்டில் யாருக்கும் சொல்லவில்லை.
ஏன் என்ன காரணம், மகன் படித்தால் பெருமை தானே?
வீட்டின் வறுமை, தம்பியின் படிப்பு, அக்கா திருமணச் செலவு காரணமாக நானும் படிக்க போய் விட்டால் இன்னும் கஷ்டம் அதிகமாகிவிடுமே என்று தடுத்துவிடுவார்கள் என்ற பயம். அதன் பின்னர் சீட்டு கிடைத்தவுடன் தான் வீட்டில் சொன்னேன்.
எங்கு சேர்ந்தீர்கள்? படிப்புச் செலவை எப்படி சமாளித்தீர்கள்?
வேலூரில் பொறியியல் கல்லுரியில் சீட்டு கிடைத்தது. சிறுக சிறுக சேமித்த சேமிப்பு கைகொடுத்தது. செல்போன் ரீசார்ஜ் செய்து கொடுத்து அந்த வருமானம் மூலம் வந்த சொற்ப வருமானம் செலவுகளுக்கு உதவியது. அம்மா மாதம் 500 ரூபாய் அனுப்புவார்கள்.
கல்லூரி வாழ்க்கை எப்படி இருந்தது?
ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாது என்பதால், முதல் ஒரு வாரத்தில் வெறுத்துப்போய் விட்டேன். ஊருக்கே திரும்பி விடலாமா என்கிற எண்ணம் தோன்றியது. ஆனால் எனக்கு கணிதத்தில் ஆர்வம் என்பதால் கணிதத்தில் பாஸாகி விடலாம். மீதியைப் பிறகு பார்த்துக்கொள்வோம் என்று தொடர்ந்தேன்.
ஆங்கிலம் முக்கியமான ஒரு பிரச்சினையாக இருந்திருக்குமே?
கண்டிப்பாக எனக்கு படிக்க மட்டுமே தெரியும், அர்த்தம் கூட தெரியாது. அதன் பின்னர் தினமும் 15 வார்த்தைகளை சுவற்றில் எழுதி பழகுவேன். இப்படியே 100 நாளில் 1500 வார்த்தைகள் புலப்பட்டன. ஆனாலும் பேச வராதது பெரிய குறையாக இருந்தது.
அப்புறம் எப்படி ஐஏஎஸ்?
அது ஒரு திருப்புமுனை, நான் அந்த எண்ணத்தில் இருந்தது இல்லை. ஆனால் சென்னைக்கு என்னைப் போகத் தூண்டினார் ஒரு நண்பர். ரூபன் என்பது அவர் பெயர், அவர் என் வாழ்க்கையின் திருப்பு முனை.
அவர் ஐஐடியில் என்னை விண்ணப்பிக்கச் சொன்னார். அந்த அளவுக்கு என்னால் முடியுமா? என்ற சந்தேகம் இருந்தபோது, விண்ணப்பித்து விடு. அதற்கென்று பயிற்சி வகுப்பு உள்ளது என்று வழிகாட்டினார்.
அதன் பின்னர் தான் சென்னை வந்தீர்களா?
அதன் பின்னர் முழுமையாக சென்னை வரவில்லை. பயிற்சி எடுக்க பரங்கிமலையில் வகுப்பில் சேர்வதற்காக 9 இளைஞர்கள் சென்னை வந்தோம். வாரத்தில் சனி, ஞாயிறு வகுப்பு இருக்கும். மற்றவர்களிடம் பணம் இருக்கும், தங்கும் இடம் இருக்கும். ஆனால் என்னிடம் சொற்ப பணமே இருந்தது. சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ரயில் ஏறி, சென்னை வருவோம்.
பரங்கிமலை வகுப்பில் பங்கேற்றுவிட்டு இரவு தங்குமிடம் இருக்காது. அதனால் பரங்கிமலை ரயில் நிலையத்தில் இரவு 2 மணிவரை படித்துவிட்டு பிளாட்பாரத்தில் படுத்து உறங்குவேன்.
அதிகாலையில் எழுந்து இன்ஸ்டிடியூட் சென்று அங்கும் முகம் கைகால் கழுவி வகுப்பில் கலந்துகொள்வேன். இப்படியே பல வாரங்கள் சென்றன. பின்னர் நண்பர் ஒருவரின் உதவியால் ரூம் கிடைத்தது. அதன் பின்னர் ஐஐடியில் சேரும் வாய்ப்பு கிடைத்தது.
ஐஐடியில் எப்படி சேர்ந்தீர்கள்?
அஷோக் என்ற ஆசிரியர்தான் பயிற்சி கொடுத்தார். அவர் என் நிலையைப் பார்த்து பணம் வாங்காமலே பயிற்சி அளித்தார். அதன் பின்னர் ஐஐடியில் எம்.டெக். சீட் கிடைத்தது.
ஐஐடியில் இந்தியா முழுவதும் இருந்தும் மாணவர்கள் படித்தார்கள். அவர்களுடன் ஆங்கிலத்தில் பேசவேண்டிய தேவை தானாகவே அமைந்தது. அது நான் ஆங்கிலத்தில் பேசும் திறமையை வளர்க்க உதவியது. அங்குதான் கிளாஸ் டாப்பர் ஆனேன்.
அதன் பின்னர் ஐஐடியில் படிக்கும்போது அங்கு படித்துவிட்டு, பரங்கிமலைக்கு சைக்கிளில் செல்வேன், பின்னர் ரூமுக்கு வந்து இரவு 2 மணி வரை படிப்பேன். காரணம் அன்று எடுக்கப்பட்ட பாடங்களைப் படிக்க வேண்டும் அல்லவா?
ஐஏஎஸ் அதன் பின்னர் தான் முடித்தீர்களா?
எனக்கு பெரிதும் பயிற்சி அளிக்க உதவியது அஷோக் என்கிற 60 வயது ஆசிரியர். அவர்தான் என்னை உருவாக்கியவர். பண உதவி, மன உளைச்சல் அத்தனையயும் கடக்க எனக்கு உதவியவர் அவர். யூபிஎஸ்சி தேர்வு மூலம் ஐஇஎஸ் (இந்தியன் என்ஜினீயரிங் சர்வீஸ்) படிக்கலாம் என்று ஆலோசனை கூறினார். ஐஐடியில் முதல் ஆண்டு படிக்கும் போதே ஐஇஎஸ் தேர்வை கிளியர் செய்து விட்டேன். அகில இந்திய அளவில் 75-வது இடத்தில் தேர்வானேன்.
பின்னர் ஐஏஎஸ் எப்படி தேர்வானீர்கள்?
ஐஐடியில் படிக்கும்போதே மனிதநேயம் அறக்கட்டளை இலவச வகுப்பில் சேர்ந்தேன். ஐஐடி வகுப்பு நடக்கும் போதே வாரத்தில் மூன்று நாட்கள் மனிதநேய அறக்கட்டளை வகுப்புக்கு செல்வேன். இப்படியே நான்கைந்து மாதம் சென்றது. அப்போது ஐஇஎஸ் முடித்ததால் பூனாவில் ரயில்வேயில் பணி கிடைத்தது.
அங்கு படிக்க நேரம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் படித்தேன். 2014-லிலிருந்து முழுமையாகப் படிக்க ஆரம்பித்தேன். 2014-ல் இருந்து 2016 வரை அத்தனை தேர்வுகளையும் முடித்து அகில இந்திய அளவில் 910-வது இடம் வந்தேன். அதற்கு ஐஏஎஸ் ஆக முடியாது.
அடுக்கடுக்கான தடைகள்.. பிறகு எப்படி ஐஏஎஸ் சாத்தியமானது?
அதன் பின்னர் தேர்வில் என்னென்ன தவறுகள் செய்திருந்தேன் என்பதை புரிந்துகொள்ள இங்குள்ள மனித நேயம் அறக்கட்டளை, இன்னும் சில அகாடமிகள் மூலம் பயிற்சி எடுத்தேன். அவர்கள் அனைவரும் எனக்காக பல ஆலோசனைகளை வழங்கி, பேப்பர்களை திருத்திக் கொடுத்தார்கள்.
அதன் பின்னர் 2017-ல் மொத்தமாக அனைத்து தேர்வுகளையும் வென்றேன். இவர்கள் அனைவரின் மொத்த உழைப்பு என்னை ஆளாக்கியது. முக்கியமான விஷயம் நண்பர்களின் பண உதவி முக்கியமானது. அதிக மார்க் வாங்கியதால் ஐஎப்எஸ், ஐஏஎஸ் இரண்டுக்கும் எழுதி இருந்தேன். ஆனால் ஐஎப்எஸ் ரிசல்ட் முதலில் வந்தது. 20-வது இடத்தில் வந்தேன்.
அதன் இன்டர்வியூ நடக்கும் போதே ஐஏஎஸ் தேர்வு முடிவும் வந்தது. அதில் இந்திய அளவில் 101-வது இடம் பிடித்து, ஐஏஎஸ் ஆனேன்.
ஒவ்வொரு முறையும் தடைகளை உடைத்து, முன்னேற ஊக்கமளித்தது எது?
மனச் சோர்வு முயற்சிகளை தடுக்குமே.. அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
இளைஞர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்?
சாதாரண குடும்பத்துக்கு ஐஏஎஸ் படிப்பு செலவு தாங்கமுடியுமா?
சாதாரண கிராமத்தில் உள்ள மாணவர், சாதாரண நிலையில் உள்ள ஒரு மாணவர் ஐஏஎஸ் தேர்வில் பங்கேற்க முடியுமா?
ஆங்கில அறிவு ஐஏஎஸ் தேர்வுக்கு அவசியமா?
உற்சாகமூட்டும் பதில்கள்.. முன்னேறத் துடிக்கும் அனைவருக்குமான டிப்ஸ்..
நாளை பதிலளிக்கிறார் சிவகுரு ஐஏ