*தமிழகத்தின் வட மாவட்டங்களில், தென்மேற்கு பருவக்காற்று ஈரப்பதத்துடன் வீசியது. சென்னையில், வெப்பச் சலனம் காரணமாக, நேற்று முன்தினம் மாலை மழை பெய்தது. நேற்று, திருவள்ளூர் மாவட்டம், எண்ணுார், பள்ளிப்பட்டில், தலா, 3 செ.மீ., மழை பெய்தது. சென்னை - நுங்கம்பாக்கம்; கிருஷ்ணகிரி - தளி; வேலுார் - விரிஞ்சிபுரத்தில், தலா, 2 செ.மீ., மழை பெய்தது.சென்னை விமான நிலையம், திருவள்ளூர், திருவாரூர், வேலுார், காஞ்சிபுரம், தஞ்சையில், தலா, 1 செ.மீ., மழை பதிவானது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம், வெளியிட்ட அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில், மிதமான அல்லது இடியுடன் கூடிய மழை, மூன்று நாட்களுக்கு நீடிக்கும்.
சென்னை மற்றும் புறநகரில், அடுத்த, 24 மணி நேரத்தில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நாளை மாலை அல்லது இரவு நேரத்தில், ஒரு சில இடங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.சென்னையில், நாளை அதிகபட்ச வெப்பநிலை, 38 டிகிரி செல்ஷியசாகவும், குறைந்தபட்சம், 27 டிகிரி செல்ஷியசாகவும் இருக்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது