அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான காலஅவகாசம் குறைந்து
வருவதால், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பள்ளி நிர்வாகங்களில்
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.துவக்கம் முதல் மேல்நிலை வரை உள்ள அரசுப்
பள்ளிகளில், ஆசிரியர் மாணவர் விகிதம் அடிப்படையில், மாணவர் எண்ணிக்கை
குறைந்துள்ள பள்ளிகளை இணைக்க அரசு திட்டமிட்டது.
இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் கல்வித்துறை அதிகாரிகள், மாணவர்
எண்ணிக்கை குறைந்துள்ள பள்ளிகளின் பட்டியல் அனுப்பப்பட்டது. ஒவ்வொரு
வட்டாரத்திலும் குறைந்தபட்சமாக, 4 பள்ளிகள் இப்பட்டியலில் இடம் பெற்றன.
மேலும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில், மாணவர் எண்ணிக்கை
குறைவான பள்ளிகளில் இருந்த கூடுதல் ஆசிரியர்கள், வெவ்வேறு பள்ளிகளுக்கு
இடமாற்றம் செய்யப்பட்டனர்.
பள்ளிகளை இணைப்பதனால், மீண்டும் 'சர்ப்பிளஸ்', அடிப்படையில் ஆசிரியர்களின்
எண்ணிக்கை அதிகரிக்கும். இதற்கு, தீர்வாக, மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பதன்
மூலம், ஆசிரியர்களுக்கான மாறுதல் மட்டுமின்றி, பள்ளிகளை இணைக்கும்
திட்டத்தையும் அரசு கைவிடும் என அறிவிக்கப்பட்டது.
மாணவர்களுக்கான சேர்க்கை நடத்த, ஆக., மாதம் வரை மட்டுமே வழக்கமாக அவகாசம்
வழங்கப்படும். நடப்பாண்டில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, செப்., மாத
இறுதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடப்பாண்டில்,
'கிண்டர் கார்டன்', வகுப்புகளும் பள்ளிகளில் துவக்கப்படும் என்ற
அறிவிப்புகளும், பள்ளி நிர்வாகங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், ''பள்ளியைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள
குழந்தைகளின் எண்ணிக்கை அடிப்படையில் தான், மாணவர் எண்ணிக்கை
அதிகரிக்கும். சில பகுதிகளில், குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால்,
பள்ளிகளிலும் சரிந்துள்ளது. அரசு வழங்கிய அவகாசம் நிறைவு பெற குறுகிய
நாட்கள் மட்டுமே உள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, பள்ளிகளில் அதிக
எதிர்பார்ப்பு உள்ளது. அரசு எடுக்கும் நடவடிக்கை அரசு பள்ளிகளை
மேம்படுத்துவதாக இருக்க வேண்டுமென்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும்
உள்ளது,'' என்றார்.