ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் விவரங்களை கல்வி தகவல்
மேலாண்மை முறை' (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய
உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் ஒன்பது
அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
22-ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டு
அன்று மாலையே விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால், ஜனவரி 28, 29, 30-ஆம் தேதிகளில் கைது செய்யப்பட்ட 3,283
ஆசிரியர்கள் அடைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பள்ளிக்
கல்வித் துறையோ மொத்தம் 1,111 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக
கூறுகிறது.
பள்ளிக் கல்வித் துறையின் சுற்றறிக்கையில், வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற
ஆசிரியரின் பெயரோடு அவர்கள் ஜனவரி 22 முதல் 30-ஆம் தேதி வரை எந்த தேதியில்
போராட்டத்தில் பங்கேற்றனர் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற நாள்களை நீல நிறம் கொண்டு தனியாகக்
காண்பிக்க வேண்டும். அனைத்து நாள்களும் அவர் பங்கேற்றிருந்தால் அதை
தனியாக காண்பிக்கும் படி குறிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.