ஓர் இடைநிலை ஆசிரியரின் உள்ளக் குமுறல்... - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


ஓர் இடைநிலை ஆசிரியரின் உள்ளக் குமுறல்...

Image may contain: 4 people, including Perunjithiran, people smiling, people standing and indoorநாங்கள் அரசுப் பள்ளிகளை புனரமைத்து விட்டோம்...
நாங்கள் அரசுப் பள்ளிகளுக்கு புத்தொளி பாய்ச்சி விட்டோம்...
நாங்கள் அரசுப் பள்ளிகளை கணினி மயமாக்கி விட்டோம் என மார்தட்டிக் கொண்டு இருக்கிறது தமிழக அரசு.
வகுப்பறையை நேசிக்கும் ஒரு ஆசிரியராக என் மனதில் தோன்றிய சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதில் முதல் கருத்தாக உங்களிடம் பகிர்ந்து கொள்வது என்ன என்றால், அது உங்கள் குழந்தைகளை தயவு செய்து அரசுப் பள்ளிகளில் சேர்க்காதீர்கள் என்பது தான் . ஏனென்றால் ஆரம்பக் கல்வி அளவில் அரசு பள்ளிகளால் தரமான கல்வியை கொடுக்க முடியாது.

ஒரு குழந்தையின் ஆரம்பக் கல்வியை பொறுத்தே அக்குழந்தையின் ஆளுமைத் திறன் இருக்கும் என்கிறது குழந்தை உளவியல். எனவே குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி என்பது மிக மிக ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் நம் தமிழகச் சூழலில் ஆரம்பக் கல்வி என்பது ஆரோக்கியமாக இல்லை. ஏனெனில் குழந்தைகள் ஒவ்வொரு வயதிலும் ஒரு குறிப்பிட்ட மனவோட்டம், மனவெழுச்சி, நாட்டம், விருப்பம் ஆகிய தன்மைகளைக் கொண்டிருப்பர். ஆக அந்த வயதிற்கு உரிய வகுப்பறைகளே அவர்கள் ஆர்வத்துடன் கற்கும் வகுப்பறைகளாக இருக்கும். இதைத் தவிர்த்து ஒரே வகுப்பறையில் பல தரப்பட்ட மனநிலை உடைய குழந்தைகளை வைத்து தூங்க வைக்கலாம் அல்லது விளையாட வைக்கலாமே தவிர கற்றல் கற்பித்தல் என்பது சாத்தியமே இல்லை. தமிழக கல்வி என்பது ஒரே நேரத்தில் பல வகுப்பறைகளைக் கையாளும் ஆசிரியர்களைக் கொண்ட வகுப்பறைகளாக உள்ளது. நிச்சயமாக அந்த ஆசிரியரால் கற்றல் கற்பித்தலை சிறப்பாக செய்து முடிக்க முடியாது. ஆகவே அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி என்பது சத்தியம் அற்ற ஒன்று தான் .
ஆம், இங்கு பெரும்பாலான அரசுப் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவே உள்ளன. அங்குள்ள இரு ஆசிரியர்களும் மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ள மாணவர்களுக்கு ( ஒன்றாம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, சூழ்நிலையியல் என 4 பாடங்கள், இவ்வாறாக இரண்டாம் வகுப்பில் 4 பாடங்கள், மூன்றாம் வகுப்பில் 5 பாடங்கள் என மொத்தம் 13 பாடங்களை தொடர்ந்து எவ்வித ஓய்வு நேரங்களும் இன்றி கற்பிக்க வேண்டிய அவலமான சூழல்.
இயல்பாக ஒரு ஆசிரியரால் ஒரு வகுப்பறையில் அதிகபட்சமாக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடங்களை கையாள முடியும். அல்லது ஒன்று முதல் ஐந்து வரை உள்ள வகுப்புகளுக்கு பாட வாரியாக ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பாடத்தை கற்பிக்க முடியும். ஆனால் இங்குள்ள அரசுப் பள்ளிகளில்
ஒன்று முதல் மூன்று வரை உள்ள வகுப்புகளுக்கு 13 பாடங்களை வலிந்து மாணவர்களின் தலைக்குள் திணிக்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது. இதில் தலைமை ஆசிரியருக்கு அலுவலக வேலை என்றாலோ, உதவி ஆசிரியருக்கு விடுப்பு என்றாலோ பள்ளியில் உள்ள ஆசிரியருக்கு திண்டாட்டம் தான்.
இந்நிலைமை ஆசிரியர்களுக்கு சவால் மட்டுமின்றி தலை வழியாகவே உள்ளது. இத்தகைய சூழல் மிகு விருப்பத்துடன் பணியாற்ற எத்தனிக்கும் ஆசிரியர்களுக்கும் சோர்வை ஏற்படுத்துவதாக உள்ளது.
அதிலும் தற்போது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள புதிய பெடகாஜி எனும் ஒரு கற்பித்தல் முறையில் 30 நிமிடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு வகுப்பாக மாறிக் கொண்டே இருக்க வேண்டுமாம் . உதாரணத்திற்கு ஒன்றாம் வகுப்பில் முதல் 30 நிமிடத்தை தமிழ் பாடத்தில் கற்பித்தலுக்குக் செலவழித்தேன் என்றால் ; 31 வது நிமிடம் இரண்டாம் வகுப்பிற்கு வந்து விட வேண்டும்; பின்பு 61 வது நிமிடம் மூன்றாம் வகுப்பிற்கு வந்து விட வேண்டும். இவ்வாறாக தமிழ் பாடத்திற்கு 90 நிமிடங்கள் கடந்த உடன் அடுத்து 90 நிமிடங்கள் கற்பிக்க இருக்கும் கணித பாடத்திற்கு 10 நிமிடங்களுக்குள் ஆசிரியர் தயாராக இருக்க வேண்டும் ( மாணவ எந்திரங்கள் உச்சா போய்ட்டு வருவதற்குள்) அடுத்த 90 நிமிடங்களை 3 முப்பது நிமிடங்களாக மூன்று வகுப்புகளுக்கும் தொடர்ந்து கற்பிக்க வேண்டும். முதல் வகுப்பிற்கு 60 நிமிடங்களுக்கு பிறகு ஆசிரியர் அவர்களிடம் மீண்டும் வரும் போது மாணவ எந்திரங்கள் தொடர் பயிற்சிகள் அனைத்தையும் முடித்து வைத்து இருப்பார்களாம். இந்த 60 நிமிடங்களுக்குள் ஆசிரியர் 2 ஆம் வகுப்பிற்கு 30 நிமிடங்கள் மற்றும் 3 ஆம் வகுப்பில் 30 நிமிடங்கள் என கற்பித்தல் பணிகளை முடித்திருக்க வேண்டுமாம். இடைப்பட்ட 30, 30 நிமிடங்களில் முறையே 2,3 வகுப்பு மாணவ எந்திரங்கள் அவரவர்களின் பணிகளை செய்து முடித்து இருப்பார்களாம். இந்த கற்றல் கற்பித்தல் முறையை கற்பனையில் சிந்தித்துப் பார்க்கும் போதே இது எந்த அளவிற்கு சாத்தியத்திற்கு உட்பட்டது என்பதை அறிந்து கொள்ள முடியும் என்பதுடன் இடைநிலை ஆசிரியர்கள் மீது கல்வி சார் அலுவலர்கள் எந்த அளவு குரூரமான மனநிலையில் உள்ளார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. உண்மையான கல்வி முறையின் வெற்றி என்பது வகுப்பறையை கையாளும் ஆசிரியரின் மனநிறைவில் தான் உள்ளது. ஆசிரியரின் ஆரோக்கியமான மனநிலை தான் வகுப்பறையின் ஆரோக்கியத்தையும், கல்வியின் தரத்தையும் நிர்ணயிக்கும். ஆனால் அரசின் கல்வித்துறை , இடைநிலை ஆசிரியர்களை கசக்கி பிழிந்தே ஆக வேண்டும் என்ற மனநிலையிலேயே உள்ளது.
அரசே!
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் உங்கள் பாடத்திட்டத்தை தூக்கிச் சுமப்பவர்கள் அல்ல, மாறாக அவர்கள் குழந்தைகளின் அன்பை சுமப்பவர்கள் கூடுதலாக குழந்தைகளைக் கொண்டாடுபவர்கள்.
கல்வி அதிகாரிகளே! ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் , வகுப்பில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் ஆசிரியரிடம் எதிர்பார்ப்பது எல்லாம் ; ஆசிரியர் தன்னிடம் அன்பாக பேச வேண்டும், சிரித்து பேச வேண்டும் என்பது மட்டுமே . அவர்களின் மூளையில் திணிக்க இருக்கும் எழுத்துக்களையும், பாடத் திட்டங்களையும் அல்ல.
புதிய பாடத்திட்டம் என்கிற பெயரில் ஒன்றாம் வகுப்பிற்கு பாட நூல் உருவாக்கி உள்ளார்கள். குறிப்பிட்ட பாடத்தில் , உதாரணத்திற்கு தமிழ் என எடுத்துக் கொண்டால் , அதில் பாடல்கள் எல்லாம் உண்மையிலேயே கொண்டாட்ட மனநிலையில் தான் இருக்கும் ; ஆனால் பருவம் முடியும் நிலையில் கூட எந்த ஒரு பாடலையும் குழந்தைகளால் கொண்டாடி மகிழ்ந்திருக்க முடியாத நிலை தான் இருக்கும். பின்
ஆங்கிலப் பாடம் என எடுத்துக் கொள்ளுங்கள், இந்த ஆண்டிற்கான மூன்று பருவத்திற்கான மூன்று நூல்களையும் ஒன்றாக இணைத்து பாருங்கள். தங்க ஊசியை வைத்து கண்ணைக் குத்துவது என்ற சொல்லாடல் மட்டுமே என் மனதில் வந்து போகிறது. இவர்களின் சுமையற்ற கல்வி ஆஹா...ஓஹோ... பிரமாதம் தான். யஸ்பால் பூரித்துப் போவார். நல்ல வேளை அவர் உயிருடன் இல்லை.
கூடுதலாக ஆங்கில வழிக் கல்வி கொடுமை வேறு. இருக்கும் ஈராசிரியர் பள்ளியில் பணிச் சுமை என்று கூறுவதை விட எதையும் நிறைவாக முடிக்கவில்லையே என்ற மன உளைச்சலே கொடுமையாக இருக்கையில்; ஆங்கில வழியில் வேறு கற்றல் விளைவுகளை சாதித்துக் காட்ட வேண்டுமாம். கல்வியில் முன்னேறிய பின்லாந்து, சப்பான், சீனாவின் கலைத் திட்டத்தை உள்வாங்கி புதிய பாடத்திட்டம், கற்றல் விளைவுகள் என புதுமைகளை புகுத்தி உள்ளோம் எனக் கூறுகிறீர்கள். ஆனால் அங்கு தாய் மொழியில் தானே பாடத்திட்டமும், கற்றல் விளைவுகளும்? நீங்க யாரை ஏமாற்ற சப்பான், சீனா, சிங்கப்பூர் என கதை விடுகிறீர்கள் என தெரியவில்லை.
ஆரம்ப நிலை கல்வி என்பதே ஒரு குழந்தையின் முதன்மை மொழியை வளப்படுத்தும் காலகட்டம் தானே? அப்படி தாய் மொழியை வளப்படுத்தினால் தானே அக்குழந்தையின் கல்வித் தரம் தரமாக இருக்கும். தாய் மொழியை வளப்படுத்தாமலே குறிப்பாக ஆங்கில மொழியின் துணை கொண்டு, ஒரு குழந்தையின் கல்வித் தரத்தை உயர்த்திக் விடலாம் என எந்த நாட்டுக் கலைத்திட்டத்தில் இருந்து பெற்றுக் கொண்டீர்கள்? தினக்கூலி, விவசாயக் கூலி, பாட்டாளி மக்களின் குழந்தைகளே வரும் அரசுப் பள்ளிகளில் கல்விச் செயல்பாடுகளையும், கல்வி இணைச் செயல்பாடுகளையும் முதன்மை மொழிக்கு மாற்றாக இரண்டாம் மொழியை வைத்து எந்த வழிகாட்டும் நெறிமுறைகளின் படி நடைமுறைக்கு கொண்டு வந்தீர்கள்? எனவும் தெரியவில்லை. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் உங்களது புதிய பாடத்திட்டத்தில் கல்வி இணைச் செயல்பாடுகள் ஆன நன்னலம், யோகா, மனப்பான்மை மதிப்புகள், வாழ்வியல் திறன்கள் போன்றவை சாத்தியமே இல்லை . அதற்குத் தானே கடைசி 30 நிமிடங்கள் என்கிறீர்கள். ஆம், ஏற்கனவே இருக்கும் மூன்று 90 நிமிடங்களின் போதாமை கடைசி 30 நிமிடத்தையும் விழுங்கி விடுவது உங்களுக்குத் தெரியுமா?
மற்றொன்றையும் தெரிந்து கொள்ளுங்கள் அதிகாரிகளே!
கல்வி என்பதன் இலக்கே, நல்ல நடத்தை மாற்றம் தான். நீங்கள் கல்வியை திணிப்பதால் தான் அது எதிர் நடத்தை மாற்றமாகவே உருப்பெற்று சமூக அவலங்களாகவே வளர்ந்து நிற்கும். இந்தச் சமூக அவலங்கள் கொஞ்சமா? நஞ்சமா? இப்போதும் நம்முன்...
கல்வி அதிகாரிகளே! உங்கள் இதயத்தை தொட்டு சொல்லுங்கள், நீங்கள் ஒதுக்கிய 30 நிமிடங்களுக்குள் மனித மாண்பினை கற்பிக்க, கற்றுக் கொள்ள முடியும் என நினைக்கிறீர்களா?

ஆனால் உங்களுடைய இலக்கு மனித மாண்பல்ல, மெட்ரிக் பள்ளிகளுடன் போட்டி போடுவது மாதிாி நடிப்பது. ஆம், ஒரு புறம் ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் 25% மாணவர்களை "தரமான தனியார் பள்ளிகளில்" கல்வி கற்க ஏற்பாடு செய்து தருகிறோம் என அரசுப் பள்ளிகளில் இருந்து லட்சக்கக்கான மாணவர்களை , கோடிக் கணக்கில் செலவு செய்து கடத்தி விடுவது, மறுபுறம் அரசு பள்ளிகளை தரமாக்கி விட்டோம் என தம்பட்டம் அடித்துக் கொள்வது. உங்க நடிப்பிற்கு ஆஸ்கார் எல்லாம் பத்தாது என்றே நினைக்கிறேன்.
அரசின் அதிகாரிகளே! நடித்தது போதும், மெட்ரிக் பள்ளிகள் உங்களது செல்லமான வளர்ப்பு பிள்ளைகள் தானே?
பாருங்க மக்களே! அரசே , தனியார் பள்ளிகள் தான் தரம் என கூறி விட்டது, பிறகு ஏன் உங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்?
அரசு மட்டுமா? அரசு ஊழியர்களும், அரசு பள்ளி ஆசிரியர்களும் தான் அரசு பள்ளிகள் தரம் அற்றது எனக் கூறுகின்றனர். அதனால் தான் அவர்கள் தங்கள் குழந்தைகளை தரமான தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். இவ்வாறாக அரசு ஊதியம் பெறுபவர்களே, தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்காத போது , அரசு ஊதியம் பெறாத, பாமர மக்கள் ஏன் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்?
இங்கு கொடுமை என்ன என்றால், அரசு பள்ளி ஆசிரியர்களே , அரசுப் பள்ளிகளை தரமற்றது என முடிவு செய்து தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுவது தான். இந்த கொடுமைக்கு காரணம் ஆசிரியர்களுக்கே வெளிச்சம்.
சரி சரி நான் எனது பிரச்சனைக்கு வருகிறேன்.
நமது கல்வித் துறையால் கொண்டு வரப்பட்ட பாட நூல்களும், கற்றல் கற்பித்தல் முறைகளும் வகுப்பறைக்கு ஓராசிரியர் என்றால் ஆசிரியர்கள் தாங்கள் வாங்கும் ஊதியத்தை மனதில் கொண்டு உழைப்பதில் தவறில்லை தான். ஆனால் இங்கு ஆசிரியரின் உழைப்பு என்பது பதிவேடுகளை உருவாக்குவதாக மட்டுமல்லாது கோப்புகளை (file) பராமரிக்கும் ஒரு கணினியாகவே ஆசிரியர் தன்னை உணரும் நிலையையே ஏற்படுத்துகிறது.
இது தான் உங்கள் எதிர்பார்ப்பு என்றால் வயிற்று பிழைப்பு காரணமாக அவ்வாறே இருந்து விடுகிறோம். ஆனால் ஆசிரியப் பணி என்பது தன்னை சமூக வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கும் பணி என்பதை உணர்ந்ததால் என்னவோ என்னை ஒரு கணினியாக மாற்றிக் கொள்ள முடியாமல் அவதிக்குள் உள்ளாக நேரிடுகிறது.
உங்களுக்குப் புரியுமா?
ஒவ்வொரு நாளும் பள்ளியில் இருந்து வெளியேறும் போது,
மன்னித்துக் கொள் அபிதா! இன்று உன்னிடம் பேசவே முடியவில்லை...
மன்னித்துக் கொள் மனிசா! இன்று உனக்கு எதுவுமே கற்பிக்க முடியவில்லை...
மன்னித்துக் கொள்ளுங்கள் இரண்டாம் வகுப்பு மாணவர்களே! இன்று உங்களுக்கு கற்றுக் கொள்ள வாய்ப்பினை உருவாக்கித் தரவே முடியவில்லை... என புலம்பிக் கொண்டே வீடு திரும்பும் அவல நிலையை... ஆம், இவ்வாறாக தோல்வியைத் தழுவிடும் இறுக்கமான நாட்களையே கொடுக்கிறது உங்கள் கலைத் திட்டம்.
மேலும் எந்த ஒரு குறிப்பிட்ட வகுப்பையும் நிறைவாக வளர்த்தெடுக்க முடியாமல் இந்த கல்வி ஆண்டை முடித்து இருக்கிறேன் என்ற என் குற்ற உணர்வை உங்களுக்கு எவ்வாறு தெரிவிப்பது? எனவும் தெரியவில்லை.
இன்று தமிழகத்தில் 75% க்கும் மேல் ஈராசிரியர் பள்ளிகளாக இருக்கிறது. மேலும் அரசு ஊழியர்களும், பொது மக்களும் அரசு பள்ளி மீது நம்பிக்கை அற்று உள்ள நிலையில்; வகுப்பறைக்கு ஓராசிரியர் என்கிற நிலை , கானல் நீராக மட்டுமே இருக்கும். இந்த கானல் நீர் கனவில் தத்தளிக்கும் ஈராசிரியர் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் நிச்சயமாக தீராத மன உளைச்சலால் பாதிக்கப்பட்டே இருப்பார்கள். ஏனென்றால் காலை முதல் மாலை வரை ஆரம்பப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சிறுநீர் கழிக்கும் போது மட்டுமே ஓய்வு கிடைக்கும் சூழல் உள்ளது. எனக்கு பெரும்பாலும் வீடு திரும்பும் போது தான் , நான் இன்று சிறுநீரே கழிக்கவில்லை என்ற நினைவு வரும்.
மக்களே!
இவ்வாறாக ஆசிரியர்களை வதைக்கும் அரசுப் பள்ளிகளில் தான் உங்கள் குழந்தைகளை சேர்க்கப் போகிறீர்களா?
கடந்த 22.03.19 அன்று நடந்த பதிய பாடத்திட்டம் குறித்த பயிற்சியில் கலந்து கொண்டேன். அங்கு ஆசிரியப் பயிற்றுநர் உடன் பகிர்ந்து கொள்ளும் போது, இக்கற்பித்தல் முறை ஈரசிரியர் பள்ளிகளுக்கு என்றே சிறப்பாக உருவாக்கப்பட்டது என கூறினார். எனக்கு தலை சுற்றல் வந்து விட்டது.
அப்போது எனக்குள் வந்த கோபத்தில் இவ்வாறு தான் சபித்துக் கொண்டேன்" இக்கல்வி முறையை உருவாக்கிய, நடைமுறைக்கு கொண்டு வந்த அத்தனை கல்வி சார் அதிகாரிகளையும் தொடர்ந்து பத்து நாட்களுக்கு ஒரு ஈராசிரியர் பள்ளியில் கற்பித்தல் பணியை மேற்கொள்ள வைத்து சித்திரவதையை அனுபவிக்க வைக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு நான் கல்வி அதிகாரியாக சென்று பதிவேடுகளுக்கும் கற்றல் விளைவுகளுக்கும் உள்ள இடைவெளியை சுட்டிக் காட்டி மனசாட்சியுடன் பணி செய்யுங்கள், உங்களுக்காக அரசு எவ்வளவு கோடி கணக்கில் நிதியை முதலீடு செய்கிறது " என அவர்களுக்கு அறிவுரை கூறியும் சித்திரவதை செய்ய வேண்டும் என்பதாகவே இருந்தது.
ஆசிரியப் பயிற்றுநரிடம் கூறுகிறேன் , சார்! பெடாகாஜியில் நேரப் பற்றாக்குறை பிரச்சனை உள்ளது என்கிறேன். அதற்கு அவர் கூறுகிறார் ஆசிரியர் ஒருவர் எடுக்கும் அத்தனை வகை விடுப்புகளையும் கணக்கில் கொண்டு தான் காலப்பகிர்வு செய்யப்பட்டு உள்ளது, எங்களை ஏமாற்ற முடியாது என்கிறார். நீங்கள் ஒரு நல்ல கணக்காளர் என்பது உண்மை தான் , நீங்கள் கணக்கெடுத்தது வகுப்பறைக்கு ஒரு ஆசிரியர் உள்ள பள்ளிக்கு, நடைமுறையில் இருப்பது என்பது மூன்று வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியர் என்பதையும் உங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள் ...
ஒவ்வொரு வகுப்பிலும் குறைவான எண்ணிக்கையில் தானே மாணவர்கள் இருக்கிறார்கள் என்கிறார். உண்மை தான் 30 மாணவர்கள் கொண்ட வகுப்பறையில் ஒரு பாடத்தை கற்பிக்கப் 30 நிமிடங்கள் ஆகிறது என்றால் ; 3 மாணவர்கள் கொண்ட வகுப்பறையில் 3 நிமிடத்தில் ஒரு பாடத்தை கற்பித்து விடலாம் என்ற உங்கள் கணக்கு தவறு அய்யா அவர்களே.
கல்வி அதிகாரிகளே! உங்கள் கணக்கு வழக்கில் குழம்பிப் போய் பெரும்பாலும் என்ன செய்வது என்று தெரியாமல் எதுவுமே செய்யாமல் கடந்து போகும் காலங்களும் என் வகுப்பறையில் உண்டு என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள் .
ஒருமுறை ஒரு கல்வி அதிகாரியிடம் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் பணிச் சுமை குறித்து வினவும் போது, அது உங்களின் தலை விதி என்கிறார்.
அரசு ஒரு புறம் கல்வியை தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு தாரை வார்த்து கொடுத்துக் கொண்டு , மறுபுறம் அரசுப் பள்ளிகளில் தரப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஆங்கில வழிக் கல்வி, பார் கோடு வீடியோக்கள் , பெடகாஜீ , ஆன்லைன் என பிதற்றிக் கொண்டு நம் அரசு அரசுப் பள்ளிகளில் மாணவர்களையும், ஆசிரியர்களையும் வஞ்சித்துக் கொண்டு இருக்கிறது.
இன்று அரசுப் பள்ளிகள் தலை நிமிர்ந்து ஓரளவு நிற்கிறது என்றால் அது உங்கள் நிர்வாகத் திறமையால், கலைத்திட்ட கணக்கு வழக்கால் அல்ல; அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட சில ஆசிரியர்களின் கடின உழைப்பால் மட்டுமே.
ஆசிரியர்களால் தான் அரசு பள்ளிகள் சீரழிந்து விட்டன, அவர்களை கசக்கி பிழிந்து வேலை வாங்க வேண்டும் என நினைத்து ஆத்மார்த்தமாக பணி செய்ய நினைக்கும் ஆசிரியர்களையும் இழந்து விடாதீர்கள். உண்மையிலேயே இப்போதெல்லாம் கடமைக்கு செல்வது போலவே பள்ளிக்கு நான் செல்கிறேன். வகுப்பறை உயிரோட்டமாக இல்லை. வரட்டுத்தனமான இந்த வகுப்பறை சூழலில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்றே சிந்திக்க ஆரம்பித்து உள்ளேன்.
அதற்காக கீழ்கண்ட 4 வழிமுறைகளையும் கண்டடைந்து உள்ளேன்.
1. வாய்ப்பு கிடைத்தால் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற்று தப்பித்து விடுதல்.
2. நீங்க பாட்டுக்கு ஏதாவது சொல்லிக்கிட்டு இருங்க , நாங்க பாட்டுக்கு செய்றத செஞ்சுக் கிட்டு இருக்கோம் என மன நோயாளியை போல நடிப்பது அல்லது அவ்வாறே ஆகிவிடுவது.
3. விருப்ப ஓய்வை தேர்ந்தெடுத்து மனதிற்கு பிடித்த ஒரு வேலையை தேர்வு செய்து குறைந்த ஊதியத்தில் உண்மையாக, மன நிறைவாக வாழுதல்.
4. போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தமாகுதல்.
எனக்கு 3 ஆம் நிலை சரி என தோன்றுகிறது. விரைவில் தேர்வு செய்வேன் என நினைக்கிறேன். ஏனென்றால் நான் செய்யும் பணியை நிறைவாகவும், நேர்மையாகவும் செய்திடவே விரும்புகிறேன்.
பள்ளி ஆசிரியர்களையும், மாணவர்களையும் எந்திரத்தனமாக கையாள நினைக்கும் எந்த அரசாலும் தரமான கல்வியை கொடுக்க முடியாது.
எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க வேண்டும் என்றால் குறைந்த அளவு "புவிதம்", "குக்கூ" மாதிரியான மாற்றுப் பள்ளிகளை தேர்வு செய்யுங்கள்.
இலையென்றால் வணிகத்தை கற்பியுங்கள், உறுதியாக நிச்சயமாக உங்களை பிற்காலத்தில் உங்கள் குழந்தைகள் காப்பாற்றும்.
இல்லையெனில் மெட்ரிக் பள்ளியில் சேர்த்துவிட்டால் நம் பிள்ளை வாழ்க்கையில் வெற்றி பெற்று விடும் என்ற முட்டாள்தனம் சிறந்தது தான். ஏனென்றால் கொஞ்ச காலத்திற்காவது மூட நம்பிக்கை உடன் மன உளைச்சல் இன்றி வாழலாம் . அவன் தோற்று விட்டாலும், நான் நல்லாத்தான் காசு செலவளிச்சு படிக்க வச்சேன், அவன் முன்னேறல என்றால் நான் என்ன செய்வேன்? என தன் கடமையை சரியாக செய்து விட்ட உணர்வில் நம்மை தேற்றிக் கொள்ளலாம். ஒரு வேளை உங்கள் குழந்தை வெற்றி பெற்று விட்டால் நீங்கள் அதிர்ஷ்டம் பெற்றவர், இது அரசு பள்ளிக்கும் பொருந்தும்.
எனவே பொது மக்களே!
உங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்காதீர்கள். அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்காது. மேலும் அரசுப் பள்ளிகள் உங்கள் வரிப்பணத்தில் இயங்கவில்லை என்பதால் அரசுப் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டாம்.
தனியார் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மாதம் தோறும் முறையாக செயல்படுவதால், அங்கு உரிமையோடு கேள்வி கேட்க முடியும் என்பதால் தனியார் பள்ளிகளிலேயே சேருங்கள். தனியார் பள்ளிகளில் சேர்க்க நிறைய கடன் வாங்குங்கள். கடனைக் கட்டிட லஞ்சம் வாங்குங்கள்,
அடுத்தவர் உடைமையை எவ்வாறு கைப்பற்றுவது என யோசியுங்கள், பின் அதை செயல்படுத்துங்கள், அப்படி செய்தால் தான் உங்கள் வரிப்பணத்தில் இயங்கும் காவல்துறையும், நீதி மன்றமும் , அரசும் இயங்க முடியும். எனவே அரசை இயங்க வைக்க உங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேருங்கள். ஏனென்றால் கல்வி என்றால் என்ன என்று உங்களுக்கும் புரியவில்லை; கல்வி அதிகாரிகளுக்கும் தெரியவில்லை. பாவம் தான் இடைநிலை ஆசிரியர்களும், அவர்களது வகுப்பறைகளும்.
பொது மக்கள் கடன்காரர்களாக மட்டுமே இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் அவர்கள் எப்போதும் பணத்தை தேடி ஓடுபவர்களாக இருப்பார்கள். பணம் இருந்தால் மட்டுமே அனைத்து வசதிகளையும் பெற்று சுகமாக வாழலாம். வாழ்வின் அர்த்தமே பணம் தான் என்ற மனநிலையை உருவாக்குவது தான். இந்த மனநிலையை தனியார் பள்ளிகள் வாயிலாக எளிதில் விதைத்து விடலாம் என்பதிலும் அரசின் பின்புலமாக இருப்பவர்கள் தெளிவாகவே அறிந்துள்ளனர்.
ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் தான் தெளிவில்லாமல் இருக்கிறார்கள். ஆம் , இந்த அனுபவப் பகிர்வில் உள்ள என் தெளிவற்ற தன்மையைப் போல.
எனவே உங்களது குழந்தையை அரசுப் பள்ளியில் .................

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H