ஆசிரியர்களைஇந்த
சமூகம் குழந்தைகளின் இரண்டாவது பெற்றோர் என்றே அழைக்கின்றனர். குறிப்பாக,
தொடக்கநிலையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியப் பெருமக்களுக்குத்தான் இந்த
பெருமை முற்றிலும் பொருத்தமானதாக அமையும். முதல் வகுப்பில் சேர்க்கப்படும்
பச்சிளம் குழந்தைகளைக் கையாளுதல் என்பது அவ்வளவு எளிதான செயலல்ல. மிகுந்த
பொறுமையும் தாய்மை உணர்வும் அனைவருக்கும் அவசியம். குழந்தையின் உடல்
வளர்ச்சி, உள்ள வளர்ச்சி, சமூக வளர்ச்சி ஆகியவை சீராகவும் செம்மையாகவும்
செழுமையாகவும் வளர இடைநிலை ஆசிரியர்களின் பங்களிப்புகள் அளப்பரியவை.
அத்தகைய இடைநிலை ஆசிரியர்களின் தாயுள்ளத்தையும் நாட்டிற்கு தேவையான
குடிமைப் பண்புகளைக் குழந்தைகளிடையே போற்றி வளர்க்கப் பாடுபடும்
அருங்குணத்தையும் ஒவ்வொருவரும் எண்ணிப்பார்க்க முயலுதல் நல்லது. பொதுவாகவே
குழந்தைகள் விளையாட்டின்மீதும் செயல்பாட்டின்மீதும் அதீத பற்று
கொண்டவர்களாகவே சுட்டித்தனம் மிக்கவர்களாக இருப்பர். வயது முதிர்வு மற்றும்
மனச்சோர்வு ஆகியவற்றைப் புறந்தள்ளி இடைநிலை ஆசிரியர்கள் அக்குழந்தைகளின்
மனம் விரும்பும் மற்றுமொரு குழந்தையாக நெகிழ்வுற்று கற்றலையும்
கற்பித்தலையும் கலையாக வார்த்து இயல்பாக உருவாக்குதல் என்பது தலைசிறந்த
கல்விச் சேவையாகும்.
அத்தகு, தம் பணியைத் தொழிலாக அல்லாமல் தொண்டாக மேற்கொண்டு வரும் இடைநிலை
ஆசிரியர்களை அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவது வேதனையளிக்கத்தக்கது. மத்திய
அரசுக்கு இணையாக நியாயமாகக் கிடைக்க வேண்டிய அடிப்படை ஊதியப் பலன்களையும்
படிகளையும் கடந்த இரு ஊதியக் குழுவிலும் முறையாக வழங்க மறுத்து தொடர் ஊதிய
இழப்பை ஏற்படுத்தி வருவதென்பது அரசுப் பணியாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு
எதிரான விரோத நடவடிக்கைகளாகும். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாத
அவலநிலையில் தான் தமிழ்நாட்டில் போக முடியாத, போக்குவரத்து வசதியில்லாத,
போதுமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஏதுமற்ற, பாதுகாப்பு வசதிகளற்ற
குக்கிராமங்களில் குழந்தைகளின் பொருட்டு, விரும்பியே உழன்று வருகின்றனர்.
இதில் பெண் ஆசிரியைகளின் நிலை சொல்லவொணாதது.
கடந்த இரு ஊதியக் குழுக்களிலும் காணப்பட்ட இவர்களுக்கான ஊதிய முரண்பாடுகள்
மற்றும் இழப்புகள் ஆகியவற்றைக் களைய அவ்வக்கால மாநில அரசுகளால் நியமனம்
செய்யப்பட்ட மூன்று நபர்கள் குழு மற்றும் ஒரு நபர் குழு போன்றவற்றால் உரிய,
உகந்த பலனின்றிப் போனது வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சிய கண்துடைப்பு
நடவடிக்கைகளாக அமைந்திருந்தன. பல்வேறு கட்ட அறவழி போராட்டங்களும் கூட்டு
நடவடிக்கைகளும் நீதிக்கான பயணங்களும் அதன்பொருட்டு நிகழும் பேரிடர்களும்
முடிவின்றித் தொடரும் பயணங்களாகவே காணப்படுகின்றன. இடைநிலை
ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து அநீதி இழைப்பதில் இதுவரையிலும் ஆண்ட, ஆளும்
அரசுகளுக்கிடையில் ஒரு வேறுபாடும் இல்லாதது துர்பாக்கியம் எனலாம்.
பதவி உயர்வின்போது கூடுதல் பணப்பலன்கள் கிடைப்பதை உறுதி செய்தல் தலையாய
கடமை என்பது நியதி. இது இங்குள்ள அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தக்கூடிய
ஒன்றாகவே உள்ளது. பாவப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் பதவி
உயர்வின்போது, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்
நிலையில், தாம் ஏற்கனவே பெற்று வரும் சொற்ப ஊதியத்தில் அரசுப் பணியாளர்கள்
விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள கூடுதல் பணப்பலன்கள் ஏதுமின்றி ஊதிய இழப்பு
அல்லது அதே ஊதியம் அல்லது மிகவும் குறைவான ஊதியப் பலனைத் தண்டனையாகப்
பெறும் அவலம் கொடுமையானது. இதனால், பல மூத்த இடைநிலை ஆசிரியர்கள்
தகுதியிருந்தும், விருப்பம் இருந்தும் ஊதிய இழப்பை முன்னிட்டு நியாயமாகக்
கிடைக்கும் உயர்பதவிக்கான பதவி உயர்வைப் புறக்கணித்து வரும் போக்குகள்
அதிகரிக்கத் தொடங்கி விட்டன. கடைநிலையாக இருக்கும் இடைநிலை ஆசிரியப்
பணியிடத்திலேயே பதவி உயர்வைக் காட்டிலும் சற்று கூடுதல் பலனளிக்கக்கூடிய
தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை காலத்தைத் துய்க்கும் இழிநிலையானது அவசர
அவசியம் கருதி ஆட்சியாளர்கள் மற்றும் உயர் அலுவலர்களால் களையப்படுதல்
இன்றியமையாதது.
மேலும், பட்ட காலிலே படும் என்றும் கெட்ட குடியே கெடும் என்பதற்கேற்ப,
அண்மையில் தொடக்கக்கல்வித் துறையில் காணப்படும் உபரி இடைநிலை ஆசிரியர்களைப்
புதிதாகத் தொடங்கவிருக்கும் மழலையர் பள்ளிகள் என்றழைக்கப்படும் அங்கன்வாடி
மையங்களில் முன் மழலையர் வகுப்புகளுக்கான பயிற்றுநர்களாகப் பதவியிறக்கம்
செய்ய முற்படும் முயற்சிக்கு நீதிமன்றமும் பச்சைக்கொடி காட்டியிருப்பது
வேதனையான நிகழ்வாகும்.
இதன்காரணமாக, அதற்கென பயிற்சி பெற்றுக் காத்திருக்கும் வேலைவாய்ப்பு அற்ற
இளைஞர்களின் கனவு பறிபோகும் நிலை ஒருபுறம். மற்றொருபுறத்தில்
அரசுப்பள்ளிகளில் வகுப்புக்கு ஓராசிரியர் என்ற பன்னெடுங்காலமாக ஒலித்துக்
கொண்டிருக்கும் நெடிய முழக்கமானது மாண்டு போகும் பரிதாப நிலை. இதுமாதிரியான
கொடும் நடவடிக்கைகள் வேறெந்த துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும்
நிகழ்ந்திடாத ஒன்று. ஏற்கனவே ஊதிய முரண்பாடுகளாலும் தொடர் இழப்புகளாலும்
துவண்டு கிடக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, இப்புதிய அறிவிப்பு மேலும்
அத்தகையோருக்கு மிகுந்த மனவலி உண்டாக்கும் அழித்தொழிப்பு செயலாகும் என்பது
மிகையல்ல.
கடைசியாக கண்ணீர் தழும்ப மனித சமூத்திடம் ஒரேயொரு கேள்வி:
"என்ன பாவம் செய்தார்கள் இந்த இடைநிலை ஆசிரியர்கள்?"