எனக்கு வந்த வாட்சப் பதிவில் பிடித்ததைப் பகிர்கிறேன்.
விஜய் டிவி கோபி நாத் எழுதிய "பாஸ்வேர்ட்" புத்தகத்தில் படித்ததில் பிடித்தது...*
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
இரண்டு வருஷம் இருக்கும்... ‘ஐயோ! அங்க சீட் கிடைக்கவே கிடைக்காது’னு சென்னையில் பெருமையா சொல்லப்படும் ஒரு பள்ளிக்கூடம் அது. என் நண்பனின் மகளுக்கு அங்கே யு.கே.ஜி. அட்மிஷன் வாங்க நானும் போயிருந்தேன். அந்த அட்மிஷனுக்காக என் நண்பனின் மகளைவிட நண்பன் நிறையப் படித்திருந்தான்.
‘நம்மளை எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்திருக்கானுங்க?’ங்கிற தோரணையிலேயே இருந்தாள் நண்பனின் மகள். பள்ளிக்கூடத்தின் பிரின்சிபால் ‘கடலோரக் கவிதைகள்’ ஜெனிஃபர் டீச்சர்போலவே இருந்தார். அந்தப் பரவசத்தில் அவரைப் பார்த்து நான் புன்னகைக்க... அந்த ஜெனிஃபர் டீச்சர் முகத்தைப் படக்கெனத் திருப்பிக்கொண்டார். ‘இவனைக் கூட்டி வந்ததுல ஒரு புண்ணியமும் இல்லை!’ என்று என் நண்பனுக்கு அப்போதே தெளிவாகப் புரிந்தது.விஜய் டிவி கோபி நாத் எழுதிய "பாஸ்வேர்ட்" புத்தகத்தில் படித்ததில் பிடித்தது...*
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
இரண்டு வருஷம் இருக்கும்... ‘ஐயோ! அங்க சீட் கிடைக்கவே கிடைக்காது’னு சென்னையில் பெருமையா சொல்லப்படும் ஒரு பள்ளிக்கூடம் அது. என் நண்பனின் மகளுக்கு அங்கே யு.கே.ஜி. அட்மிஷன் வாங்க நானும் போயிருந்தேன். அந்த அட்மிஷனுக்காக என் நண்பனின் மகளைவிட நண்பன் நிறையப் படித்திருந்தான்.
நாங்கள் எல்லாரும் நின்றுகொண்டிருக்க நண்பனின் மகளிடம் பிரின்சிபால் பேசினார். எல்லாமே இங்கிலீஷ்தான். நான் என் வாழ்க்கையில் பார்த்த அட்டகாசமான இன்டர்வியூ அதுதான்.
“ம்... உங்க பேரு என்ன?”
“சரித்ரா...”
“குட்... உனக்குத் தெரிஞ்சது ஏதாவது சொல்லு பார்க்கலாம்!”
“எனக்கு நிறையத் தெரியும். உங்களுக்கு என்ன வேணும்..?”
சுத்தம்... அட்மிஷன் கிடைக்காமல் இருக்க இதைவிடச் சிறந்த பதில் இருக்க முடியாது. சரித்ராவின் அம்மா லேசாக எடுத்துக் கொடுக்கப் பார்த்தார். ஆனால், ஜெனிஃபர் தடுத்துவிட்டார்.
“நீ சொல்லு... ஏதாவது ரைம்ஸ், ஸ்டோரி உனக்குத் தெரிஞ்சத சொல்லு!”
சரித்ரா சளைக்கவில்லை.
“ரைம்ஸா, ஸ்டோரியா... என்ன சொல்லணும்?” ரெண்டாவது விக்கெட்டும் அவுட். ஜெனிஃபர் டீச்சர் முகத்தில் கொஞ்சம் கோபம் தெரிந்தது.
“சரி... ஏதாவது ஸ்டோரி சொல்லு!”
“நான் படிச்ச ஸ்டோரிய சொல்லவா? இல்ல, நான் எழுதுன ஸ்டோரிய சொல்லவா..?”
“ஓ... நீ ஸ்டோரிலாம்கூட எழுதுவியா?”
“ஏன் எழுதக் கூடாதா?”
இப்போது எனக்கும் தூக்கிவாரிப்போட்டது. நண்பனிடம் அடிக் குரலில், “ நம்ம தலைமுறைக்கே இந்த ஸ்கூல்ல சீட் குடுக்க மாட்டானுக” என்றேன். ஆனால், ஜெனிஃபர் டீச்சருக்கு ஏதோ ஓர் ஆர்வம் வந்துவிட்டது. அவர் தன் வாழ்நாளில் அப்படி ஒரு கதையைக் கேட்டிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். நானும்தான்!
சரித்ரா கதை சொல்லத் தொடங்கினாள்... “ராவணன், சீதையை ஸ்ரீலங்காவுக்குக் கடத்திட்டுப் போயிட்டாரு!”
ஓப்பனிங்கைக் கேட்டவுடன் ஜெனிஃபர் டீச்சருக்கு ஆர்வம் குறைந்துவிட்டது. இருந்தாலும், “ம் சொல்லு!” என்றார்.
“சீதையைக் காப்பாத்துறதுக்காக ராமன், ஹனுமன்கிட்ட ஹெல்ப் கேட்டாரு. சரின்னு ஹனுமனும் சீதையைக் காப்பாத்துறேன்னு சொல்லிட்டாரு...”
“அப்புறம்...”
“இப்போ ஹனுமன் அவரோட ஃப்ரெண்ட் ஸ்பைடர்மேனுக்கு போன் போட்டாரு...” - இந்த ட்விஸ்ட்டை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
“எதுக்கு?”
“ஏன்னா... இந்தியாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் இடையில நிறைய மலைகள் இருக்கு. ஸ்பைடர்மேன் இருந்தா டக்டக்னு கயிறு கட்டி வேகமாப் போலாம்ல!”
“ஹனுமன்தான் பறப்பாரே?” - ஆர்வ மிகுதியில் கதையோடு ஒன்றி ஜெனிஃபர் டீச்சர் கேள்விகள் கேட்கத் துவங்கினார்.
“பறப்பாரு... ஆனா, அவரு கையில சஞ்சீவி மலை இருக்கிறதால அவரால வேகமாப் பறக்க முடியாது!” நான் சின்ன வயதில் ஏ.பி.டி. பார்சல் சர்வீஸ் லாரியில் பார்த்த ஹனுமன் படத்தை ஞாபகப்படுத்திக்கொண்டேன்.
இப்போது ஜெனிஃபர் டீச்சர் அமைதியாக இருந்தார். சின்ன மௌனத்துக்குப் பிறகு, “சொல்லட்டா... வேணாமா?” என்று கேட்டாள் சரித்ரா.
“சொல்லு... சொல்லு!” - டீச்சருக்கு ஆர்வம் அதிகமானது.
“ஹனுமனும் ஸ்பைடர்மேனும் வேகமா ஸ்ரீலங்கா போயி ராவணன் கூட சண்டை போட்டு, சீதையக் காப்பாத்திட்டாங்க. சீதை அவங்க ரெண்டு பேருக்கும் தேங்க்ஸ் சொன்னாங்க!”
“ஏன்?”
“ஹெல்ப் பண்ணவங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்தானே?”
“ஓ.கே... ஓ.கே... அப்புறம்...”
“அப்புறம்... ஹனுமன் போன் பண்ணி ஹல்க்கைக் கூப்பிட்டாரு!”
எல்லாரும் அவளை ஒரு கேள்வியோடு பார்த்தோம். எங்கள் கேள்வியை அவளும் உணர்ந்திருக்க வேண்டும்.
“வரும்போது ரெண்டு பேரும் ஈஸியா வந்துட்டாங்க. இப்போ சீதையைத் தூக்கிட்டுப் போக ஆள் வேணும்ல!”
அப்படிப் போடு... என்ன லாஜிக்! ஆனால், ஜெனிஃபர் டீச்சர் விடவில்லை.
“ஹனுமனே சீதையைத் தூக்கிட்டு வரலாமே?” - சரித்ராவை மடக்கிவிட்ட திருப்தி டீச்சரிடம் தெரிந்தது.
“எப்படி முடியும்? அவரோட ஒரு கையில மலை இருக்கு. இன்னொரு கையில ஸ்பைடர்மேன் கயிறைப் பிடிக்கணும்ல...” - டீச்சர் சிரித்துவிட்டார். “மூணு பேரும் இந்தியா கிளம்புறப்போ, என் ஃப்ரெண்ட் அக்ஷயை மீட் பண்றாங்க. சீதா அவன்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தாங்க!”
“உன் ஃப்ரெண்ட் அக்ஷய் அங்க எப்படி வந்தான்?”
“இது நான் எழுதுன கதை. யார் வேணாலும் வருவாங்க!” ஜெனிஃபர் கோபப்படவில்லை. அவர் அடுத்த ட்விஸ்ட்டுக்காகக் காத்திருந்தார்.
“அப்புறம் எல்லாரும் இந்தியா வந்துட்டாங்க. சென்னைக்கு வந்து வேளச்சேரி பஸ் ஸ்டாண்டு கிட்ட நின்னாங்க!”
ஜெனிஃபர் டீச்சர் ஏதோ கேட்க வந்து, சட்டென அமைதியாகிவிட்டார். ஏதாவது கேட்க வேண்டுமே என்பதற்காக இப்போது நானும் கேள்வி கேட்டேன்.
“ஏம்மா பஸ் ஸ்டாண்டு கிட்ட நின்னுட்டாங்க?”
“வழி மறந்துபோச்சு. அதான் நின்னுட்டாங்க. உடனே ஹல்க்குக்கு ஒரு ஐடியா வந்துச்சு. அவர் டோராவுக்கு போன் பண்ணார்!”
டோரா என்பது வழிகாட்டும் ஒரு கதாபாத்திரம் என்று அன்றைக்குத்தான் எனக்குத் தெரியும்.
“டோரா வந்ததும் எல்லாரும் சேர்ந்து சீதையைக் கொண்டுபோய் வேளச்சேரி வீனஸ் காலனில விட்டுட்டாங்க. அவ்ளோதான்..!” - சின்னச் சிரிப்புடன் சரித்ரா கதையை முடித்தாள்.
மிகவும் அமைதியாக ஜெனிஃபர் டீச்சர் கேட்டார். “ஏம்மா சீதையை வீனஸ் காலனில கொண்டுபோய் விட்டீங்க?”
“ஏன்னா... அங்கேதான் என் வீடு இருக்கு. நான்தான் சீதை!” என்றாள். எனக்கு மெய்சிலிர்த்துப்போனது.
ஜெனிஃபர் டீச்சர் எழுந்து வந்து அவளைக் கட்டி அணைத்துக்கொண்டார். அவளுக்கு யு.கே.ஜி. அட்மிஷனையும் கூடவே ஒரு டோரா பொம்மையையும் கொடுத்தார்.
சரித்ராவை என் பைக்கில் வைத்துக்கொண்டு நிறைய முறை நான் ரவுண்ட் போயிருக்கிறேன். அவள் எனக்கும் நிறையக் கதைகள் சொல்லியிருக்கிறாள். நான்தான் கவனித்துக் கேட்டதே இல்லை.
தான் கேட்ட, பார்த்த, கவனித்த, கடந்துபோன, மங்கலாகப் புரிந்துகொண்ட ஏதேதோ விஷயங்களைக் கோத்து ஒரு நவீன ராமாயணத்தை அவள் எப்போது எழுதினாள் என்பது யாருக்கும் தெரியாது. அவள் எழுதியதாகச் சொல்வதும் அவள் யோசித்துவைத்திருந்த அந்தக் கற்பனையைத்தான்.
குழந்தைகள் அற்புதமான கற்பனை சக்திகொண்டவர்கள். அதிலிருந்து பல்வேறு கதைகளும், ஆச்சர்யங்களும், நம்ப முடியாத உவமைகளும், சிலிர்க்க வைக்கிற கவித்துவமும் அருவிபோலக் கொட்டுகிறது. ஆனால், நம்முடைய பரீட்சை அமைப்புகள் ராமாயணத்தை எழுதியது யார் என்ற கேள்விக்குப் பதில் சொன்னால், மார்க் போடுகிற அநியாயத்தைச் செய்கின்றன.
பொறாமை, கோபம், வஞ்சம், துரோகம், குரோதம் என்ற பெரிய மனிதர்களின் குணங்கள் எதுவும் இல்லாமல்... குழந்தைகளின் மனமும் மூளையும் பரிசுத்தமான கற்பனைகளைக் கொட்டி விளையாடுகின்றன. ஆனால், வட்டம் எது? சதுரம் எது என்று சரியாகச் சொல்லத் தெரிந்த பிள்ளைக்கே இந்தச் சமுதாயம் ‘சபாஷ்’ போடுகிறது.
ஒரு வடிவமைக்கப்பட்ட மோல்டுக்குள் அவர்களைக் கொண்டுவருவதற்கு நாம் எடுக்கும் பகீரத முயற்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குள் இருக்கும் கற்பனை சக்தியைக் களவாடித் தின்கின்றன....