சென்னை: கொரோனா தொற்று பரவல், தமிழகத்தில் வேகம் பெற்றுள்ளதால், பல
மாவட்டங்கள், ஆரஞ்ச் மண்டலத்தில் இருந்து, சிவப்புக்கு மாறும் அபாயம்
ஏற்பட்டுள்ளது. மொத்த வியாபார சந்தையான, கோயம்பேடு, தொற்று பரவும் களமாக
மாறியதால், சென்னை நகரில், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, தொடர்ந்து
அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதிப்பு
நேற்று, 3,023 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், ஏப்ரல் மாத துவக்கத்தில், பல மாவட்டங்களில், கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஆனால், அம்மாத இறுதியில், பல மாவட்டங்கள், கொரோனாவை கட்டுப்படுத்தின. இதனால், சிவப்பு மண்டலத்தில் இருந்த, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல் உட்பட, 24 மாவட்டங்கள், நோய் தொற்று குறைந்த பகுதியாக, ஆரஞ்ச் நிற மண்டலமாக மாறின. இம்மாவட்டங்களில், 10க்கும் மேற்பட்ட நாட்களாக, புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.
தமிழகத்தில், ஏப்ரல் மாத துவக்கத்தில், பல மாவட்டங்களில், கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஆனால், அம்மாத இறுதியில், பல மாவட்டங்கள், கொரோனாவை கட்டுப்படுத்தின. இதனால், சிவப்பு மண்டலத்தில் இருந்த, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல் உட்பட, 24 மாவட்டங்கள், நோய் தொற்று குறைந்த பகுதியாக, ஆரஞ்ச் நிற மண்டலமாக மாறின. இம்மாவட்டங்களில், 10க்கும் மேற்பட்ட நாட்களாக, புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.
எனினும், சென்னை மற்றும் அதன் அருகாமையில் உள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய, மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டு வந்தது. மற்ற மாவட்டங்களில், புதிதாக பாதிப்பு ஏற்படாததால், அம்மாவட்ட மக்களிடையே நம்பிக்கை துளிர் விட துவங்கியது.
இந்நிலையில், சென்னையில், கோயம்பேடு பூ மார்க்கெட் மற்றும் காய்கறி மார்க்கெட்டில், வியாபாரிகளுக்கு தொற்று ஏற்பட்டது தெரிய வந்தது. மேலும், அப்பகுதியில் விதிமீறி, சலுான் கடை நடத்தியவர் வாயிலாக, பலருக்கு தொற்று ஏற்பட்ட, அதிர்ச்சி தகவலும் வெளியானது.
மூடப்பட்டது:
இதற்கிடையே, மார்க்கெட் நிர்வாகத்தை கவனிக்கும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற நபருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து வியாபாரிகள் பாதிக்கப்படுவதால், பூ மற்றும் பழம் மார்க்கெட் மூடப்பட்டது. மேலும், 200 காய்கறி கடைகள் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில்லரை வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டு, அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் பகுதியில், காய்கறிகள், பழங்கள் விற்கவும், கொள்முதல் செய்யவும் வந்த, வெளி மாவட்ட வியாபாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் தொற்று பரவியது தெரிய வந்தது. அதையடுத்து நடந்த விசாரணையில், கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருந்து, பல மாவட்டங்களுக்கு, 2,000க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளதும், சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோர் பலர், விதிமீறி, காய்கறி லாரிகளில் சென்றதும் தெரிய வந்து உள்ளது. அதன்படி, மாநிலம் முழுதும், கொரோனா தொற்று, மீண்டும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை, நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில், கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில், 37 ஆயிரத்து, 206 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்; அரசு கண்காணிப்பு மையத்தில், 40 பேர் உள்ளனர். நேற்று, 10 ஆயிரத்து, 584 பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 266 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில், 203 பேருக்கு, தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுதும் இதுவரை, 1.41 லட்சம் நபர்களுக்கு பரிசோதனை நடத்தியதில், 3,023 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், நேற்று மட்டும், 38 பேர் வீடு திரும்பியுள்ளனர். அவர்களையும் சேர்த்து, 1,379 பேர் குணமடைந்துள்ளனர். சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, கோவையைச் சேர்ந்த, 44 வயது நபர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதன் வாயிலாக, கொரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 30 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பாதிப்பு அறிகுறியுடன், 2,362 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த, ஒரு வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில், சென்னையில் அதிகளவு பாதிப்பு ஏற்பட காரணமான, கோயம்பேடு சந்தை வாயிலாக, மற்ற மாவட்டங்களிலும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்:
அதன்படி, கோயம்பேடு சந்தை வாயிலாக, சென்னையில், 102 பேர்; அரியலுாரில், 22; கடலுாரில், 26; காஞ்சிபுரத்தில், ஏழு; விழுப்புரத்தில் 53; பெரம்பலுாரில், ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து, ஆரஞ்ச் மண்டலத்தில் உள்ள பல மாவட்டங்கள், மீண்டும் சிவப்பு மண்டலத்திற்கு மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த ஒரு வாரத்தில், கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருந்து, லாரிகளில் பயணித்தவர்கள், தங்களாகவே முன்வந்து, மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.'அப்போது தான், உங்கள் குடும்பத்தினருக்கோ, மற்றவர்களுக்கோ பரவாமல் தடுக்க முடியும்' என, அறிவுறுத்தி உள்ளனர்.
