
உலகில் பல நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தடுப்பூசி மருந்து பரிசோதனைகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் பேவிபிராவிர் மருந்தினை விரைவில் அறிமுகம் செய்ய தயாராக உள்ளதா சிப்லா நிறுவனம் அறிவித்துள்ளது. இதை சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் உறுதி செய்துள்ளது.
குறைவான விலையில் இந்த மருந்தினை தயாரிக்கும் வகையில் உள்நாட்டிலேயே கிடைக்கும் வேதிப் பொருட்களை வைத்து உருவாக்கும் தொழில்நுட்பத்தை சி.எஸ்.ஐ.ஆரின் ரசாயன தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம் வழங்கி உள்ளது.
இதுகுறித்து சி.எஸ்.ஆர்., இயக்குனர் சந்திரசேகர் தெரிவித்துள்ளதாவது, ' இந்த தொழில்நுட்பம் மிகவும் வித்தியாசமான ஒன்று. இதன் வாயிலாக பெருமளவிலான மருந்து உற்பத்தியை மிக குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ள முடியும்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கொரோனா சிகிச்சையின் போது பேவிபிராவிர் மருந்தினை அவசரகால சிகிச்சைக்கு பயன்படுத்த இந்திய அரசின் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் ஏற்கனவே அனுமதி அளித்த நிலையில் இந்த மருந்து உற்பத்தியினை சிப்லா நிறுவனம் முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.








