பக்குவம் என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் அசத்தலாகச் சொன்னது !! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Saturday 11 July 2020

பக்குவம் என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் அசத்தலாகச் சொன்னது !!

பக்குவம் என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் அசத்தலாகச் சொன்னது!!!!!

கவியரசு கண்ணதாசன்
🌼கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.
🌼கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை
இருப்பது அவனுக்குப் புரிகிறது.

🌼இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது.

🌼ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது.


🌼இளம் பருவத்தில் இறைவனைப்பற்றிய சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாகத் தோன்றும்.

🌼வாழ்வில் அடிபட்டு வெந்து, நொந்து ஆண்டவனைச் சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும்.

🌼பக்குவமற்றவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள்.

🌼பக்குவம் வர வர, ரத்தம் வற்ற வற்ற இந்தத் தத்துவங்கள் எல்லாம் மறுபரிசீலனைக்கு வரும்.

🌼நடைமுறைக்கு ஒத்த சிந்தனை, பக்குவப்பட்ட பிறகே தோன்றும்.

🌼இருபது வயது இளைஞனைப் பெண் பார்க்கச் சொன்னால் எல்லாப் பெண்களுமே அவன் கண்களுக்கு அழகாய்த்தான் தெரிவார்கள்.

🌼நாற்பது வயதிற்கு மேலேதான், நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் தெளிவு அவனுக்கு வரும்.

🌼கல்லூரி மாணவனைப் படிக்கச் சொன்னால் காதல் கதையையும், மர்மக் கதையையும் படிப்பதில்தான் அவன் கவனம் செலுத்துவான்.

🌼காதலித்துத் தோற்றபின்தான், அவனுக்குப் பகவத் கீதையைப் படிக்கும் எண்ணம் வரும்.

🌼விளையாட்டுத்தனமான மனோபாவம் பிடிவாதத்திற்குப் பெயர் போனது.

🌼எதையும் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு `அதைவிட உலகமே கிடையாது’ என்று வாதாடும்.

🌼எதிர்த்தால் வேரோடு பிடுங்க முயலும்.

🌼பக்குவமற்ற நிலை என்பது இரண்டு `எக்ஸ்ட்ரீம்’ நிலை.

🌼ஒன்று, இந்த மூலையில் நின்று குதிக்கும், அல்லது அந்த மூலையில் இருந்து குதிக்கும்.

🌼பக்குவ நிலைக்குப் பெயரே நடு நிலை.

🌼மேலை நாட்டில் ஒரு பழமொழி உண்டு.

🌼`இருபது வயதிற்குள் ஒருவன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை என்றால் அவன் அப்பாவி; முப்பது வயதிற்கு மேலும் அவன் கம்யூனிஸ்டாக இருந்தால் அவன் மடையன்!’

🌼இதுதான் அந்தப் பழமொழி.

🌼பரபரப்பான பருவ காலத்தில் கோயிலுக்குப் போனால் தெய்வம் தெரியாது என்பது மட்டுமல்ல, அங்கே சிலையில் இருக்கும் அழகுகூடத் தெரியாது.

🌼ஐம்பது வயதில் கோயிலுக்குப் போனால், சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும்.

🌼இதில் வெறும் பருவங்களின் வித்தியாசம் மட்டுமில்லை.

🌼பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது.

🌼ஏன், உடம்பேகூட இருபது வயதில் எந்த உணவையும் ஜீரணிக்கிறது.

🌼நாற்பதிற்கு மேலேதானே `இது வாய்வு’, `இது பித்தம்’, என்கிற புத்தி வருகிறது.

🌼`டென்ஷன்’ என்ற ஆங்கில வார்த்தைக்குச் சரியான தமிழ் வார்த்தை எனக்குப் புரியவில்லை.

🌼`முறுக்கான நிலை’ என்று அதைக் கூறலாம்.

🌼அந்த நிலையில் `எதையும் செய்யலாம், எப்படியும் செய்யலாம்’ என்கிற `திமிர்’ வருகிறது.

🌼அதில் நன்கு அனுபவப்பட்ட பிறகு, `இதைத்தான் செய்யலாம்’, `இப்படித்தான் செய்யலாம்’ என்ற புத்தி வருகிறது.

🌼இனி விஷயத்திற்கு வருகிறேன்.

🌼`ஞான மார்க்கப் பக்குவமும் அப்படிப்பட்டது தான்’ என்பதைக் கூறவே இவற்றைக் கூறினேன்.

🌼உள்ளம் உடலுக்குத் தாவி, உடல் ஆன்மாவுக்குத் தாவிய நிலையே, பக்குவப்பட்ட நிலை.

🌼தேளைப் பிடிக்கப் போகும் குழந்தை, அதையே அடிக்கப் போகும் மனிதனாக வளர்ச்சியடைகிறது.

🌼அதற்குப் பிறகு, அந்தத் தேளிடமேகூட அனுதாபம் காட்டும் ஞானியாக அந்த மனிதன் மாறி விடுகிறான்.

🌼இன்றைய பக்குவம் இருபதாண்டுகளுக்கு முன் எனக்கு இருந்திருந்தால், எனது அரசியலில்கூட முரண்பாடு தோன்றியிருக்காது.

🌼வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில், நன்மை தீமைகளை உணரும் நிதானம் அடிபட்டுப் போகிறது.

🌼ஆரம்பத்தில் `இதுதான் சரி’ என்று ஒன்றை முடிவு கட்டிவிட்டு, பின்னால் `இது தவறு’ என நாமே சொல்ல வேண்டிய நிலை வருகிறது.

🌼சரியாகக் கணக்கிட்டால், மனித வாழ்க்கைக்கு மூன்று கட்டங்கள்.

🌼முதற் கட்டம் ஒன்றுமே புரியாத உணர்ச்சிக் கூத்து.

🌼இரண்டாவது கட்டம் ஏதோ இருப்பதாக, ஆனால் தெளிவாகத் தெரியாத, மயங்கிய நிலை.

🌼மூன்றாவது கட்டம் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்றும், நமக்கும் மேலே ஒரு நாயகன் இருக்கிறான் என்றும் முழு
நம்பிக்கை கொண்ட ஞானநிலை.

🌼இந்த மூன்றாவது நிலையை முதற் கட்டத்திலேயே எய்தியவர்கள் பலர் உண்டு.

🌼சுவாமி விவேகானந்தரைப் போல, வளைந்து கொண்டே வளர்ந்த மரங்கள் உண்டு.

🌼அவர்கள் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அந்த நிலையை எய்தியவர்கள்.

🌼மற்றவர்கள், அனுபவத்தின் மூலமாகத்தானே பக்குவ நிலையை அடைய வேண்டியிருக்கிறது!

🌼எகிப்து மன்னன் பாரூக், பட்டம் துறந்து பாரிஸ் நகரில் சீரழிந்த போதுதான் `மனிதாபிமானம்’ என்றால் என்ன என்பதை உணர முடிந்தது.

🌼ஆனால், அரண்மனை வாசத்திலேயே அதனை உணர்ந்து கொண்ட சித்தார்த்தன், கெளதம புத்தரான வரலாறும்
நம்முடைய நாட்டிலே உண்டு.

🌼தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் நடுவே தடுமாறும் மனிதர்கள் நம்முடைய நாட்டிலே மிக அதிகம்.

🌼ஒன்று, தூங்குவதென்றால் நிம்மதியாகத் தூங்கி விடவேண்டும்.

🌼விழிப்பதென்றால் சுறுசுறுப்பாக விழித்துக் கொள்ள வேண்டும்.

🌼தூக்கமும் விழிப்புமாக இருப்பதால் தூக்கத்தின் பலனும் கிட்டாது, விழிப்பின் பலனும் கிட்டாது.

🌼`மனப்பக்குவம்’ என்பது அனுபவங்கள் முற்றிப் பழுத்த நிலை.

🌼அந்த நிலையில் எதையுமே `இல்லை’ என்று மறுக்கின்ற எண்ணம் வராது.

🌼`இருக்கக்கூடும்’ என்றே சொல்லத் தோன்றும்.

🌼எனது நண்பரும் முன்னாள் அமைச்சருமான தோழர் நெடுஞ்செழியன் அவர்கள், ஒரு கட்டுரையில்
“நாஸ்திகன் தன் கொள்கையில் தெளிவாகவே இருக்கிறான்” என்றும், “ஆஸ்திகன் தான் தடுமாறுகிறான்” என்றும், “கடவுள் இல்லை என்பதை நாஸ்திகன் உறுதியாகச் சொல்லுகிறான்”
என்றும், “உண்டு என்பதற்கு ஆஸ்திகன் ஒழுங்காக விளக்கம்
தர முடியவில்லை” என்றும் எழுதியிருக்கிறார்.

🌼நல்லது.

🌼`இல்லை’ என்று சொல்பவனுக்கு எந்தப் புத்தியும் தேவையில்லை.

🌼எதைக் கேட்டாலும் `இல்லை’ என்று சொல்ல முட்டாளாலும் முடியும்.

🌼ஆனால் `உண்டு’ என்று சொல்பவனுக்குத்தான் அதை நிலைநாட்டப் போதுமான அறிவு தேவைப்படும்.

🌼“பூமிக்குக் கீழே என்ன இருக்கிறது” என்று கேட்டால் எதுவுமே இல்லை, என்று குழந்தைகூடப் பதில் சொல்லிவிட முடியும்.

🌼ஆனால், “அடியிலே நீர்; அதன் கீழே நெருப்பு” என்று சொல்ல விஞ்ஞான அறிவு வேண்டும்.

🌼பாத்திரம் செய்பவனுக்குப் பல நாள் வேலை; போட்டு உடைப்பவனுக்கு ஒரு நாள் வேலை.

🌼நாஸ்திகன் எப்போதுமே தெளிவாக இருக்க முடியும்.

🌼காரணம் எதைக் கேட்டாலும், எந்திரம் போல் `இல்லை இல்லை’ என்று மட்டுமே அவன் பதில் சொல்லப் போகிறான்.

🌼நன்றாகத் தலையாட்டத் தெரிந்த அழகர் கோயில் மாட்டை
விடவா அவன் உயர்ந்து விட்டான்.

🌼ஆனால், ஆஸ்திகனோ, விபூதிக்கு ஒரு காரணம், குங்குமத்திற்கு ஒரு காரணம், திருமண்ணுக்கு ஒரு காரணம் சொல்லியாக வேண்டும்.

🌼சொல்வது மட்டுமல்ல, எதிரியையும் ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்.

🌼ஒன்றை ஒப்புக்கொண்டு, அதன் உட்கீற்றுகளை விவரிப்பதற்குத் தகுந்த பக்குவம் தேவை.

🌼ஆஸ்திகன், பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் இயக்கம் வரையில் கண்டுபிடிக்க முயலுகிறான்.

🌼ஜனனம், மரணம் இரண்டையும் அவன்தான் ஆராய்கிறான்.

🌼அப்படி ஆராய்ந்து, இந்து வேதாந்திகள் செய்த முடிவை இதுவரை விஞ்ஞானம் தாண்டியதில்லை.

🌼வேதங்களின் முடிவையே, விஞ்ஞானம் தன் முடிவாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

🌼ஆனால், விஞ்ஞானமும் அறியாமல், மெய்ஞ்ஞானமும் அறியாமல், அஞ்ஞானத்தைக் கொண்டு உழலும் நாஸ்திகனுக்கு, எல்லாம் இயற்கையாக நடக்கின்றன’ என்று சொல்லத் தெரிகிறதே தவிர,
அந்த இயற்கை என்பது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

🌼பக்குவ நிலைக்கும், பக்குவமற்ற நிலைக்கும் வேறுபாடு இதுதான்.

🌼“கோயிலுக்குப் போய் ஏன் தேங்காய் உடைக்க வேண்டும்?”

🌼“அப்படிக் கோயிலிலே என்ன இருக்கிறது?” என்று நாஸ்திகன் கேட்கிறான்.

🌼அந்தத் தேங்காயை உடைக்கும் வரையில், `அந்தத் தேங்காய்க்குள் என்ன இருக்கிறது?’ என்பது
அவனுக்குத் தெரியுமா?

🌼அதில் வழுக்கையும் இருக்கலாம், முற்றிய காயும் இருக்கலாம்.

🌼ஆகவே, உடைத்த பின்பே காயைக் கண்டு கொள்ளும் மனிதன், உணர்ந்த பின்பு தெய்வத்தைக் காண முடியும் என்பது உறுதி.

🌼`கடவுளே இல்லை’ என்று வாதாடியவன் எவனும் `எனக்கு மரணமே இல்லை’ என்று வாதாட முடியவில்லையே!

🌼`மரணம்’ என்று உணரப்படும்போதே சிலருக்குப் பக்குவம் வருகிறது.

🌼எனக்குத் தெரிந்த மிகப் பெரிய நாஸ்திகர் கூட தமது அந்திம காலத்தில் யார் கொடுத்த விபூதிகளையும் பூசிக் கொண்டார்கள்.

🌼மரணத்தின் பின் எங்கே போகப் போகிறோம் என்று நிச்சயமாகத் தெரியும் வரை ஈசுவரன் ஒருவன் இருப்பது உறுதி.

🌼நன்கு பக்குவப்பட்டவர்கள், தம் வாழ்நாளிலேயே காணமுடிகிறது.

🌼இப்போதெல்லாம், `போலித்தனம் எது? பொய் எது?’ என்பதைக் கண்டுகொள்ளக்கூடிய தெளிவு எனக்கு வந்து விட்டது.

🌼காரணம், வயது மட்டுமல்ல, பக்குவம்.

🌼செருப்புப் போடாத காலத்தில், மலத்தை மிதித்திருக்கிறேன். அதனால், இப்போது செருப்புப் போடுகிறேன்.

🌼கடலை மாவில் செய்த பலகாரத்தைச் சிறுவயதில் விரும்பிச் சாப்பிட்டேன். இப்போது அது தவறு என்பதை உணருகிறேன்.

🌼என் முன்னால் ஒரு வாதியையும், பிரதிவாதியையும் கொண்டு வந்து நிறுத்தி, `யார் நிரபராதி’ என்று சொல்லச் சொன்னால் அவர்களது வாக்குமூலங்கள் இல்லாமலேயே, நான் அவர்களைக்
கண்டுபிடிப்பேன்.

🌼என்னுடைய தீர்க்கதரிசனத்துக்கு முதல் அடிப்படை அறிவல்ல; அனுபவம்.

🌼தலைப்பை மீண்டும் நினைவுபடுத்தினால், அதன் பெயரே `பக்குவம்’.

🌷பக்குவமாய் வாழுங்கள்;
வாழ்வதன் பயனை உணருங்கள்;
வாழ்வின் பலனை அனுபவியுங்கள்
எல்லாம் அவன் செயல்.🙏

2 comments:

  1. அட்டா என்ன ஒரு அனுபவம், என்ன ஒரு சிந்தனை, அனுபவம் என்கிற பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவராயிற்றே, எதைச் சொன்னாலும் உள்ளார்ந்த வாழ்க்கைத் தத்துவங்களே மேலோங்கி இருக்கும். படிக்கப் படிக்க இன்பம் தேனாய் ஊறும், வாழ்வியல் பக்குவத்தை இப்படிப் பதமாய்ச் சொல்ல, இக்கவி போல் இன்னொரு கவி பிறக்கத்தான் வேண்டும்.. கவியரசர் வாழ்க...

    மண்ணுலகில் கண்ணதாசன் மகத்து வத்தால்
    மனிதரிலே மாணிக்க மென்றே சொல்வோம்.!
    எண்ணத்தில் எப்போதும் ஏற்றம் கொண்டே
    எழிலாக இயற்கையாக எழுதும் தொண்டன்.!
    பண்ணாகத் பக்குவத்தைப் பகின்ற தாசன்
    பார்முழுதும் தமிழ்மக்கள் புகழும் நேசன்.!
    கண்ணபெரு மானினருள் கனிந்த அன்பன்
    காலத்தால் அழியாத கவிதை தந்தான்.!

    பெருவை பார்த்தசாரதி

    ReplyDelete
  2. அனுபவம் என்கிற பாடம் நமக்கு கற்று கொடுப்பதை பயன்படுத்தினால், நமக்கு வெற்றி நிச்சயம், அது மட்டுமல்லாமல் கண்ணதாசன் தான் படித்தை மட்டும் சொல்லாமல், அனுபவத்தையும் சொல்லக்கூடியவர், மேலே குறிப்பிட்ட நாத்தீகத்தை பற்றி,அவர் அதுலிருந்து கண்டு, உண்ர்ந்து,பட்டறிந்த படிப்பினையே
    நமக்கு பக்குவமாக அளித்து உள்ளார்.அதனை மீண்டும் படிக்க,நினைவூட்டிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H