கேரளா நடத்தும் அகில இந்திய நீட் மாதிரித் தேர்வு ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநில மாணவர்களும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்தும் படிப்பதற்காக நாடு முழுவதும் நீட் என்னும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கரோனா தொற்றுப் பரவல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்ட நீட் தேர்வு, செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் கேரள மாநிலக் கல்வி தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் அகில இந்திய நீட் மாதிரித் தேர்வு நடைபெறுகிறது. இணையத்தில் நடைபெறும் இத்தேர்வில், கேரள மாணவர்களுடன் அனைத்து மாநில மாணவர்களும் பங்கேற்கலாம்.
தேர்வு ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெற உள்ளது. மாணவர்கள் இதில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். sietkerala.gov.in. என்ற இணைய முகவரியில் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 9 வரை மாணவர்கள் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான அரசின் அபியாஸ் செயலிலும் இணைய மாதிரித் தேர்வை மாணவர்கள் எழுதும் வசதி உள்ளது. இதற்கிடையே கரோனா அச்சம் காரணமாக நீட் 2020 தேர்வைத் தள்ளிவைக்க வேண்டும் என்று ஏராளமான மாணவர்கள் சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.