
ஆரோக்கியம் நிரந்தரமானதாகத் தொடர என்னென்ன உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளலாம் என்று பட்டியலிட்டால் அதில் வெள்ளைப்பூண்டுக்கு தனியிடம் கிடைக்கும். இதனை உணவில் விலக்கிவைப்போரும் கூட, இதன் மருத்துவக் குணங்களை மறுக்கமாட்டார்கள்.
இந்த பூண்டைப் பச்சையாகச்
சாப்பிடுவது பெரிதாக விளைவுகளை ஏற்படுத்தாது. கொழுப்புடன் சேரும்போது
மட்டுமே பூண்டின் குணமும் மணமும் மாறும். இதனாலேயே பூண்டை எண்ணெயில் வதக்கி
உண்ணுவதை வழக்கமாக வைத்திருந்தனர் நம் முன்னோர்கள். குழம்பு, கூட்டு,
பொறியல் என்று சமையல் வகைகள் அனைத்திலும் இதற்கு எப்போதும் இடம் உண்டு.
வாயுத்தொல்லையினால் அவதிப்படும்போது, பூண்டைத் தோல் உரித்து எண்ணெயில்
வதக்கிச் சாப்பிடும் பழக்கம் இப்போதும் பலரால் பின்பற்றப்படுகிறது. சில
நேரங்களில் வாயுவினால் ஏற்படும் நெஞ்சு வலியைத் தவிர்க்கவும் இப்பழக்கம்
உதவுகிறது.
குடலில் இருக்கும் நச்சுகளை அகற்றுவதாலும், செரிமானத்தைத்
தூண்டுவதாலும் எல்லா வகை உணவுகளிலும் இதனைச் சேர்க்க முடியும். அது
மட்டுமல்லாமல், உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை நீக்க பூண்டின் உதவி
கண்டிப்பாகத் தேவை. சிறுநீரைப் பெருக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.
வெள்ளைப்பூண்டில் இருக்கும் கந்தகம் எனும் சல்ஃபர் சரும பாதிப்புகளைச் சரி
செய்யும் வல்லமை கொண்டது. மூலம், பவுத்திரம் போன்ற வெளியே சொல்லமுடியாத
பிரச்சனைகளையும் இது சீராக்கும்.
வெரிகோஸ் வெயின், ருமாட்டாய்டு
ஆர்த்தரைட்டிஸ் உள்ளிட்ட காலில் ஏற்படும் பாதிப்புகளையும் பூண்டு சரி
செய்யும். நோய் ஏற்பட்டால் மட்டுமல்ல, முன்கூட்டியே எந்த பாதிப்பும்
ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்றாலும் கூட பூண்டு உணவில் சேர்க்கப்பட
வேண்டியது அவசியம்.








