
மோசமான சூழலில் பிறந்து வளர்ந்து உயரம் தொட்டவர்களை, குப்பையில் பிறந்த மாணிக்கம் என்று போற்றும் வழக்கம் உலகெங்கிலும் உண்டு. இப்படியொரு போற்றுதலுக்கு குப்பைமேனி செடி காரணமாக இருந்திருக்குமோ? இந்த சந்தேகத்தைத் தோற்றுவிக்கும் அளவுக்குப் பல்வேறு பயன்களை அள்ளித் தருகிறது ‘குப்பைமேனி’.
நாம் விளைவிப்பதைத் தவிர நிலத்தில் வளரும் அனைத்துச் செடிகளையும் களையாக நோக்கும் எண்ணமே நம்மிடம் அதிகம். அப்படியிருக்க, நாம் வீண் என்று கொட்டும் குப்பைக்கிடங்கில் முளைத்திருக்கும் செடியை எப்படி விரும்ப முடியும்? இந்த எண்ணமே அதனால் கிடைக்கும் பவ்லேறு நற்பயன்களில் இருந்து நம்மை விலக்கி வைக்கிறது.
தற்போது தமிழகம் எங்கும் மழை பொழிந்து வருகிறது. மழை பெய்து முடிந்த சில நாட்களிலேயே வீட்டு வாசல், மண் மேடு, மைதானம், காலி நிலம் என்று எங்கும் குப்பைமேனி முளைத்திருப்பதைக் காணலாம். சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் இச்செடிக்கும் தனி இடம் உண்டு. குறிப்பாக, தோல் நோய்களைக் குணப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது குப்பைமேனி.
அது மட்டுமல்லாமல், சளி இருமலால் அவதிப்படும் குழந்தைகளுக்கு நல்லதொரு தீர்வையும் இது அளிக்கிறது. குப்பைமேனி இலையைப் பறித்து, அதில் இருந்து சாறு பிழிந்து, சுண்ணாம்புடன் அதனைக் கலந்து, அதன்பின் சர்க்கரை சிறிது சேர்த்து, தொண்டைப் பகுதியில் தடவினால் போதும். இரவு முழுவதும் இருமி இருமி தூக்கத்தைக் குழந்தைகள் பறி கொடுப்பது அறவெ நின்று போகும். இந்த கலவையைத் தடவிய சில நிமிடங்களில் தூங்கத் தொடங்கி, குறைந்தபட்சம் 6 முதல் 7 மணி நேரம் வரை குழந்தைகள் உறங்குவார்கள்.
மழைக்காலத்தில் குழந்தைகள் எதிர்கொள்ளும் இன்னொரு பிரச்சனை உடலில் திடீர் வீக்கங்கள், கட்டிகள் ஏற்படுவது. வெயிலால் உலர்ந்திருக்கும் நிலத்தில் மழை நீர் விழுந்தவுடன், எல்லா பொருட்களும் அமிலத்தன்மை உடையதாக மாறும். இதுவே உடலில் கட்டிகள் ஏற்படக் காரணம் ஆகிறது. இதனைக் குணப்படுத்த மஞ்சளுடன் குப்பைமேனிச் சாற்றைக் கலந்து கட்டி இருக்கும் இடத்தில் தேய்த்தால் போதும். சுமார் 1 மணி நேரம் கழித்து குளித்துவிட்டு வந்தால் வலியும் வேதனையும் குறைந்திருப்பதைக் காண முடியும்.
நாள்பட்ட காயம், தழும்புகள் மறையவும் இதனைப் பயன்படுத்துவது உண்டு. அம்மை நோய் தாக்கியதால் ஏற்பட்ட தழும்புகளைப் போக்க குப்பைமேனி பயன்படுகிறது என்பது பலரும் அறியாதது.








