எதற்குமே தற்கொலை முடிவு கிடையாது என நீட் தற்கொலை குறித்து இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி ஜெயதுர்கா, தர்மபுரி மாணவர் ஆதித்யா, திருச்செங்கோடு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல அரசியல் தலைவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்கத்தொடங்கினர்.
அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், திரைத்துறையை சேர்ந்த சிலரும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்துவருகின்றனர். இதுதொடர்பாக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், "நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுத போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதைப் போல அவலம் வேறு இல்லை. கரோனா அச்சம் போன்ற உயிர்பயம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்களது நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது." என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், "வெற்றியோ தோல்வியோ அதை சரிசமமாக பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். தோல்வி இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்காது. வாழ்க்கையில் பெரிய இடத்திற்கு வருவதற்கு தோல்வி மிகவும் முக்கியம். இந்த ஒரு பரிட்சையில் தோற்றால், வாழ்க்கையிலேயே தோற்றதாக அர்த்தம் இல்லை. வாழ்க்கை மிகவும் பெரியது. தற்கொலை எதற்குமே முடிவு கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.