புதுடில்லி :கொரோனா ஊரடங்கில் ஐந்தாம் கட்ட தளர்வுகள், இன்று முதல்
அமலுக்கு வருகிறது. பள்ளிகள், சினிமா தியேட்டர்கள், பொழுது போக்கு
பூங்காக்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா பரவல்
காரணமாக, கடந்த மார்ச், 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்
பின், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், அதில், நான்கு கட்டமாக, பல
தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன.இந்நிலையில், ஊரடங்கில் ஐந்தாம் கட்ட
தளர்வுகள், இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான வழிகாட்டு முறைகளை
மத்திய அரசு கடந்த, 1ம் தேதி அறிவித்தது.
இதையடுத்து, இன்று முதல்,
தனிக் கட்டடங்களில் இயங்கும் சினிமா அரங்குகள், 'மல்டிப்ளக்ஸ்'
திரையரங்குகள், 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க, அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது.டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யவும், கூட்டத்தை
குறைக்க, கூடுதல் டிக்கெட் கவுன்டர்கள் திறக்கவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.பார்சல் செய்யப்பட்ட உணவுகளை மட்டும் விற்க, அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்கவும் அனுமதி
வழங்கப்பட்டுள்ளது. பூங்காக்களை திறப்பதற்கு முன்னும், மூடிய பின்னும்,
அனைத்து பகுதிகளையும், கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். முக
கவசம் அணியாத பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது.
இன்று முதல்,
பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனினும், இது பற்றி,
மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும் என,
தெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்லி, மஹாராஷ்டிரா உட்பட சில மாநிலங்கள்,
பள்ளிகளை இப்போது திறக்கப்போவதில்லை என, அறிவித்துள்ளன. உத்தர பிரதேசம்,
பஞ்சாப் உட்பட சில மாநிலங்களில், 19ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு
செய்யப்பட்டுள்ளது.பள்ளிகள் திறந்தாலும், நேரில் வர அச்சப்படும்
மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகள் தொடர வேண்டும்.

பள்ளிக்கு நேரில் வர விரும்பும் மாணவர்கள், பெற்றோரின் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் கடிதத்தை பெற்று வர வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீச்சல் வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு மட்டும், நீச்சல் குளங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு நேரத்தில், 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது. பங்கேற்கும் வீரர்கள், தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.எனினும், இந்த தளர்வுகள் அனைத்தும் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு பொருந்தாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.