அரசு பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அரசு பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், பள்ளிக்கு விடுப்பு எடுத்து தனியார் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியளிக்க செல்வதாக கேள்வி எழுப்பப்பட்டது.
இது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், " அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு விடுப்பு எடுத்து விட்டு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியளிக்க சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிக்கு விடுமுறை எடுத்துவிட்டு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியளிக்க செல்வதாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் " என்று தெரிவித்தார். கொரோனா காரணமாக இணையவழி கல்வி ஊக்குவிக்கப்பட்டுள்ள நிலையில், வருமானத்திற்கு எதிர்பார்த்து அரசு ஆசிரியர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியளிக்க செல்வதாக கூறப்படுகிறது.