
தமிழகத்தில் இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 7ம் தேதி கல்லூரிகள் திறப்பதற்கு முன்னதாக, விடுதி மாணவர்களை 2 வாரங்கள் தனிமைப்படுத்துவது அவசியம் என்று தமிழக அரசு கட்டாயமாக்கியுள்ளது.
இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்க்கு கல்லூரிகளை டிசம்பர் 7 திங்கள்கிழமை முதல் திறக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக, மாநில அரசு சனிக்கிழமையன்று நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்.ஓ.பி) வெளியிட்டது. அனைத்து விடுதி மாணவர்களும் கல்லூரி வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் தமிழக அரசு அவர்களுக்கு 2 வார தனிமைப்படுத்துதலை கட்டாயமாக்கியுள்ளது.
தற்போது அவரவர் வீடுகளில் இருக்கும் மாணவர்கள் பல்வேறு இடங்களிலிருந்து வருவதால் அவர்கள் வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவதற்கு முன்பு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் சுய சுகாதார கண்காணிப்பில் இருப்பார்கள். அவர்கள் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்ற அறிக்கையை கொண்டு வந்தாலும் அல்லது பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி நிர்வாகம் பரிசோதனை செய்தாலும் தனிமைப்படுத்துதலில் இருப்பார்கள் என்று தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அந்த உத்தரவில், 'கல்வி நிறுவனங்களுக்கு அருகிலுள்ள உறவினர்களின் வீடுகளில் தங்கவும், வகுப்புகளில் கலந்து கொள்ளவும் மாணவர்களை ஊக்குவிக்கும்படி கல்வி நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அதில் மாணவர்கள் விடுதிகளில் அறைகளைப் பகிர்வதை அனுமதிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளைக் உள்ளவர்களுக்கு போதுமான தனிமைப்படுத்தும் ஏற்பாடுகள் இருக்க வேண்டும். கோவிட் -19 தொற்று உறுதி பரிசோதனை கல்வி நிறுவனங்களின் அளவில் அல்லது அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு வகுப்புகளை பிரிக்க வேண்டும் என்று பல்கலைக் கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
வகுப்பறைகளில் உள்ள இடத்தைப் பொறுத்து சுழற்சி அடிப்படையில் 50% மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்த உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்றால் அவர்கள் வீட்டில் இருந்து ஆன்லைனில் படிக்க விரும்பினால், கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் ஆய்வுப் பொருட்களையும் மின் வளங்களை அணுகுவதையும் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக வகுப்பறைகள் இருக்கைகள் மேசை நாற்காளிகளை கிருமி நீக்கம் செய்வதற்கும், கை கழுவுதல், முகக் கவசம் அணிதல், மாணவர்களின் வெப்பநிலையை சரிபார்ப்பதற்கும் ஏற்பாடுகள் செய்ய கல்லூரிகளிடம் கேட்டுக்கொளப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு இறுதி ஆண்டு டிப்ளோமா மற்றும் ஹோட்டல் மேலாண்மை படிக்கும் மாணவர்களுக்கும் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.








