திமுக ஆட்சி அமைந்ததும் ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், #JactoGeo போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று பணிக்குத் திரும்பிய பிறகு துறை நடவடிக்கை எடுப்பது வஞ்சகம் இல்லையா? நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும். உறுதி” என்று பதிவிட்டுள்ளார்.
அத்துடன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நியாயமான கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டத்தை கொச்சைப் படுத்திய அதிமுக ஆட்சி ஆயிரத்து 68 ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு 17 விதியின் பி பிரிவின் கீழ் குற்ற குறிப்புகள் வழங்கி இன்னலுக்கு உள்ளாக்குவது கண்டனத்துக்குரியது. போராட்டத்தை திரும்பப் பெற முதலமைச்சரே வேண்டுகோள் விடுத்து பிறகு ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பது வஞ்சகமான அணுகுமுறை. இரகசியக் குறிப்பேடு நீக்கம், குடும்பங்களுக்கு பாதுகாப்பு நிதி, கருணை அடிப்படையில் வேலை ,ஈட்டிய விடுப்பை சரண் செய்தால் பணம் ,திருமணம், வாகனம், வீடு கட்ட கடன் ,மருத்துவ காப்பீடு திட்டம் ,மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம், சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் ,சாலை பணியாளர் ,மக்கள் நலப் பணியாளர் நியமனம், கலந்தாய்வு மூலம் பணிமாறுதல், ஆசிரியர் நியமனம் என திமுக ஆட்சிதான் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் வாழ்வில் ஒளியேற்றி உயர்த்தி உள்ளது.
அதிமுக ஆட்சி நள்ளிரவில் கைது செய்து ஒரே நாளில் லட்சக்கணக்கானவர்களை டிஸ்மிஸ் செய்த போதும் அரணாக அன்றும் இன்றும் நிற்கிறது திமுக. அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும். மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சி அமைந்ததும் அவர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.










