தகவல் வழக்கறிஞர் சுப்பிரமணியம் பாலாஜி. நன்றி சார்
ஜாமீன் கையெழுத்து... கண்ணை மூடிக்கொண்டு போட்டால்-எஸ்,முருகேசன்
கடன் என்று யார் முன்னாலும் கைகட்டி நிற்காமல் கம்பீரமாக வாழும் மனிதர் நாராயணன். ஆனால், நண்பருக்காக போட்ட ஜாமீன் கையெழுத்தால் தலை குனிந்து நிற்கக்கூடிய சூழ்நிலை வந்துவிட்டது.
''தனியார் சீட்டு நிறுவனம் ஒன்றில் 50,000 ரூபாய்க்கு சீட்டு எடுத்த நண்பனுக்காக ஜாமீன் போட்டேன். பள்ளிக்கூட காலத்து பழக்கம் எங்களுக்குள். சீட்டு எடுத்து சில மாதங்களில் துபாய் போய்விட்டான், சீட்டை கட்டாமல் விட்டுவிட்டு! ஜாமீன் போட்ட எனக்கு சீட்டு கம்பெனி நோட்டீஸ் அனுப்பிடுச்சு. என் தங்கச்சி கல்யாணத்துக்குச் சேர்த்து வெச்சிருந்த பணத்தை எடுத்து சீட்டைக் கட்டி சிக்கலில் இருந்து தப்பிச்சேன்'' என்று தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார் நாராயணன். இன்று நாராயணனுக்கு ஏற்பட்ட கதி நாளைக்கு உங்களுக்கும் ஏற்படலாம்! நெருங்கிய நண்பராக இருந்தாலும் சொந்த-பந்தமாகவே இருந்தாலும் சரியாக விசாரிக்காமல் ஜாமீன் கையெழுத்துப் போடாதீர்கள்.
''ஜாமீன் கேட்கப்படுவதே, ஒருவேளை கடன் வாங்கியவர் அதைத் திரும்பச் செலுத்தாவிட்டால் வசூலிப்பதற்கு ஒரு ஆள் வேண்டும் என்பதால்தான். அதனால்தான் கடனை மீட்பதற்குத் தகுதி உள்ள ஆளைத்தான் ஜாமீன்தாரராக கடன் வழங்குபவர்கள் கேட்கிறார்கள்'' என்றார் சென்னை, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில்குமார்.*
பெரும்பாலும் சிக்கல் வருவது வங்கிகளில் வாங்கும் கடனுக்கு ஜாமீன் போடும்போதுதான்!
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைமை மேலாளர் புனிதா, ''வாங்கிய கடனைச் சரியாகத் திருப்பிச் செலுத்தாத பட்சத்தில்தான் பிரச்னை உருவாகிறது. அப்போது வங்கி, கடனாளியின் சொத்தைக் கைப்பற்றும் நிலை ஏற்படுகிறது. அப்படி அவரிடம் சொத்து இல்லை என்கிறபோது, ஜாமீன் போட்டவர்தான் கையெழுத்திட்ட கடன் தொகைக்குப் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்'' என்றார்.
''மற்றொருவரின் வியாபாரக் கடனுக்காக ஒருவர் ஜாமீன் போட்டிருந்தால் யாருக்கு அதிக பொறுப்பு?'' என்று அவரிடம் கேட்டபோது, ''கடன் தொகைக்கு இருவருக்கும் சமமான பொறுப்பு உண்டு. கடன் செலுத்தப்படாவிட்டால், சர்ஃபேஸி (Sarfaesi) சட்டத்தின் மூலம் பிணையாகக் காட்டப்பட்ட சொத்தை பொது ஏலத்தின் மூலம் விற்க வாய்ப்பு உள்ளது'' என்றார்.
அப்படியானால் ஜாமீன் கையெழுத்துப் போடுவதே தவறான செயலா..?
மொத்தமாக அப்படி ஒதுக்கிவிட முடியாது. பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ளும் ஒரு முறைதான் ஜாமீன் என்பது. ஆனால், யாருக்கு ஜாமீன் போட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். கடனாளி கடனைக் கட்டாத சூழ்நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஜாமீன் போட்டவரும் ஆளாக வேண்டியிருக்கும்.
, ''கடனாளியிடம் இருந்து கடனை வசூலிக்கவோ அவருடைய சொத்துக்களை ஜப்தி செய்யவோ வழியே இல்லாத நிலையில், முதல்படியாக கடனை அடைக்குமாறு ஜாமீன்தாரருக்கு நோட்டீஸ் அளிக்கப்படும். அப்போது ஜாமீன்தாரர் கடனை அடைக்க முன்வரவில்லை என்றால், நீதிமன்றத்தில்வழக்குத் தொடரப்படும். அப்போது கடன் மற்றும் வட்டியை ஜாமீன்தாரர் கொடுக்கவேண்டிவரும். கொடுக்கத் தவறினால், அவரது அசையும் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும். மாதச் சம்பளம் வாங்குபவராக இருந்தால், அவரது மாதச்சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு கொடுக்க வேண்டி வரும். அதுவும் போதவில்லை என்றால், அசையா சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும்'' என்றார்.
ஒரு கடனுக்கு ஜாமீன் பெறுவதன் நோக்கமே கடன் வாங்கியவரின் பொருளாதார நிலைக்கு உத்தரவாதம் தேவைப்படுவதால்தான். அதனால்தான் ஜாமீன்தாரரின் பொருளாதார நிலையின் பேரில் கடன் வழங்கப்படுகிறது. ஆகவே, நட்பு அல்லது கவுரவம் கருதி ஒரு சாதாரண கையெழுத்துதானே போடுகிறோம் என்று அலட்சியமாக கையெழுத்துப் போட்டுவிட்டு பிறகு சிக்கலில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதே நல்லது.
ஜாமீன் கையெழுத்துப் போடும்போது எந்த எந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பட்டியல் இட்டார் வழக்கறிஞர் சுப்பிரமணியம் பாலாஜி.
* நாம் உதவப் போகும் நபர் எதற்காகக் கடன் வாங்குகிறார்?
* அந்தத் தொகையை எப்படிச் செலவு செய்யத் திட்டமிட்டிருக்கிறார்.
* அவரது வருமானத்துக்கும் கடன் தவணைக்கும் உள்ள விகிதாசாரம் என்ன?
* கடன் தொகையைத் திருப்பித் தர உண்மையிலேயே தகுதி உடையவரா?
* அவருடைய உண்மையான சம்பளம், சொத்து என்ன?
* அவருக்கு வேறு ஏதாவது கடன்கள் இருக்கின்றனவா?
* நடத்தை மற்றும் பழக்க வழக்கங்கள் எப்படி?
* கடன் செலுத்தப்படாத சூழ்நிலையில் நம்மால் அதைத் திருப்பிச் செலுத்த முடியுமா?
மேற்கண்ட கேள்விகளுக்கு ஸ்திரமான பதில் கிடைத்தால் ஜாமீன் போடுவதில் தவறில்லை!
தனிநபர் ஜாமீன் போலவே, நிறுவனங்களும் ஜாமீன் வழங்க முடியும். உதாரணமாக ஒரு நிறுவனத்தின் கணக்குகள் மற்றும் ஊழியர்களின் கணக்குகள் எல்லாம் ஒரே வங்கியில் இருந்து, அந்த வங்கியில் ஊழியர் ஒருவர் கடன் கேட்டால், நிறுவனம் கொடுக்கும் ஜாமீன் அடிப்படையில் வங்கி கடன் கொடுக்கும். ஆனால், பொதுவாக ஊழியர்களின் கடனுக்குப் பொறுப்பேற்க விரும்பாத பெரும்பான்மையான நிறுவனங்கள் ஜாமீன் கொடுப்பதில்லை.
வங்கிக் கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போடுபவர் மீது என்னவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்?
''கடனைத் திரும்பப்பெறாத பட்சத்தில், ஜாமீன் கையெழுத்துப் போட்ட வங்கியில் ஜாமீன்தாரர் ஏதேனும் டெபாசிட் செய்திருந்தால், அந்த டெபாசிட்டை முதிர்வு தேதியில் தராமல் எடுத்துக்கொள்ள வங்கிக்கு உரிமை உண்டு. டெபாசிட்டில் 50,000 ரூபாய்தான் இருக்கிறது, கடன் தொகை 1.5 லட்சமாக இருந்தால் கிடைத்தவரை லாபம் என்று 50,000 ரூபாயை வங்கி எடுத்துக்கொள்ளலாம். அதற்கான அதிகாரம் வங்கிக்கு இருப்பதாக ஜாமீன் கையெழுத்து போட்ட படிவத்தில் தகவல் இருக்கும்.
அந்த வங்கியில் ஜாமீன்தாரர் நகைக்கடன் வாங்கியிருந்தால், அதற்கான தவணையை ஒழுங்காகச் செலுத்தி முடித்தாலும் நகையைத் திரும்பத் தராமல் பிடித்து வைத்துக்கொள்ள முடியும்!
இதேபோல என்.எஸ்.சி. (NSC), இன்ஷூரன்ஸ் பாலிசி போன்றவை, முதிர்வுத் தொகையிலிருந்து நாம் உத்தரவாதமளித்த கடனுக்கு ஈடாகப் பிடித்து வைத்துக் கொள்ளலாம். அதனால், ஜாமீன் விவகாரத்தில் ஜாக்கிரதையாக இருங்கள்









