ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கடந்த 2013ம் ஆண்டு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடைபெற்றது. அதில், தேர்ச்சி பெற்ற சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு மேலாக ஆணைக்காக தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகள் வரை மட்டுமே செல்லுபடியாகும். இந்த ஆண்டோடு சான்றிதழ் காலாவதியாவதால் பணி நியமன ஆணையை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றனர். இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை சந்தித்தார். அவர்களிடம் ஓரிரு நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.