அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டுமென 69% பெற்றோர்கள் விரும்புவதாக தில்லியில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மேலும் நடப்பு கல்வியாண்டில் முழுவதுமாக இதுவரை ஆன்லைன் வகுப்புகளே நடைபெற்று வருகின்றன. நாட்டில் ஒரு சில மாநிலங்களில் ஜனவரியில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டுமா என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் வரும் ஏப்ரல் மாதத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு 69 சதவீத பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் 19,000க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்துகொண்ட ஆய்வில், 26 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு ஏப்ரல் மாதத்திற்குள் கரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.
69% பெற்றோர்கள் வரும் கல்வியாண்டில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தயாராக உள்ளனர். இதில் 23% பேர் ஜனவரி முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற ஆன்லைன் தளம் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.









