அரசு கல்லுாரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் அனைவரையும் பாரபட்சமின்றி பணிவரன்முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்கலைகளின் கீழ் செயல்பட்ட 41 உறுப்பு கல்லுாரிகளில் முதற்கட்டமாக 14, இரண்டாம் கட்டமாக 27 கல்லுாரிகள் அரசு கல்லுாரிகளாக மாற்றப்பட்டன. அவை மண்டல கல்லுாரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்படும் வரை சம்மந்தப்பட்ட பல்கலையே மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்க அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் அவர்களை பணிவரன்முறை செய்ய சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் சென்னையில் விரைவில் நடக்கவுள்ளது. இதில் மதுரை மண்டலத்தில் அருப்புக்கோட்டை, திருமங்கலம், சாத்தூர், வேடசந்தூர் உட்பட 27 கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்கள் அழைக்கப்படவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.
அவர்கள் கூறுகையில் ''ஒரே கல்வித் தகுதி இருந்தும் இரண்டாம் கட்டமாக அரசு கல்லுாரி களாக மாற்றப்பட்ட 27 கல்லுாரிகளில் பணியாற்றுவோரை நேர்காணலுக்கு அழைக்கவில்லை. எங்களையும் அழைக்க வேண்டும்'' என்றனர்.