தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு – இன்று 1,630 பேருக்கு தொற்று!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1630 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2020ம் ஆண்டை போலவே தற்போதும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கொரோனா தடுப்பு விதிகள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் தற்போது வரை அமலில் உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இருப்பினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டி உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1630 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,71,440 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 12 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,630 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,023 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 8,49,064 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 633 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.